சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரது மகள் ஜனனி (23) தனியார் கார் ஷோருமில் பணியாற்றிவருகிறார். இவரும்  தனியார் பேப்பர் மில்லில் கூலித்தொழிலாளியாக வேலைசெய்துவரும் பண்ணாரி அருகிலுள்ள பட்டரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன்  சிவக்குமார் (30) என்பவரும்  கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். மற்ற காதலர்களைப்போலவே  இவர்களும் காதல் வானில் சிறகடித்துப்பறந்தனர். மகிழ்ச்சியாக நாட்கள் சென்றன.  ஒருநாள், ஜனனியின் காதல் விவகாரம் அவரது பெற்றோர்களுக்கு தெரியவந்தது,

அவர்கள்  ஜனனியை கடுமையாக கண்டித்ததுடன் இனி வேலைக்கே செல்ல வேண்டாம் என்று தடைபோட்டனர், ஆனால் பெற்றோர்களிடம் மன்றாடினார் ஜனனி, இனி சிவக்குமாரை காதலிப்பதை விட்டுவிடுகிறேன் , தங்கள் சொல்படியோ கேட்கிறேன்,  நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்துகொள்கிறேன் என பெற்றோர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார் ஜனனி. அதில் மனமிறங்கிய அவரது பெற்றோர் மீண்டும் அவரை வேலைக்கு செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் ஜனனி வழக்கம்போல வேலைக்கு சென்றுவந்தார். அவரது பெற்றோருக்கு சொன்னபடியே சிவக்குமாருடன் பேசுவதையும் சந்திப்பதையும்,  நிறுத்திக்கொண்டார் ஜனனி.

இது சிவக்குமாருக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியது,  இத்தனை நாட்களாக உருகி உருகி காதலித்துவந்த ஜனனி,  இப்போது விலகி விலகிச் செல்கிறாளே.? காரணம் என்னவென புரியாமல் தவித்தான் சிவக்குமார். ஜனனி வேலைக்கு போகும்போதும் வரும்போது அவளை வழிமறித்து தன் காதலுக்கு பதில் சொல்லுமாறு கேட்டு நச்சரித்தான். ஒருகட்டத்தில் ஜனனி ஒரேயடியாக,  "உன்னை காதலிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை", "உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை"  தயவு செய்து இனி என்னை தொந்தரவுசெய்யாதே என்று கூறிவிட்டார்.  இதில் அதிர்ந்துபோன சிவக்குமார் செய்வதறியாது திகைத்தான், ஜனனியை  மறக்கு முடியாமல் பித்துப்பிடித்தவனைப்போல சுற்று வந்த நிலையில். நேற்றுக்  காலை சிக்கரசம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் ஜனனி பஸ்சுக்காக காத்திருந்த பொழுது கத்தியுடன் வந்த சிவகுமார் , தன்னை காதலிக்குமாறு அவரின் கழுத்தை பிடித்து  மிரட்டினார்.

 

ஒரு கட்டத்தில் அவரை தரதரவென புதருக்குள் இழுந்துச் சென்ற சிவக்குமார் அவரின் கழுத்தில் கத்தியை வைத்து "காதலிக்கிறாயா இல்லை  கழுத்தை அறுக்கவா.?  என்று வெறிபிடித்தவனைப் போல் மிரட்ட ஆரம்பித்தார். பயத்தில் ஜனனி அலறினார், அதைக் கேட்டு  அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து  சிவக்குமார் செய்வதை கண்டு அதிர்ந்தனர். " தம்பி வேண்டாம்.!  அந்த பெண்ணை ஒன்றும் செய்துவிடாதே"  என்று மன்றாடினர் ஆனால் சிவக்குமார் அதை கேட்பதாக தெரியவில்லை...

பதிலுக்கு,  ''யாராவது அருகில் வந்தால் ஜனனியை உயிருடன் பார்க்க முடியாது'' என்று இன்னும் ஆக்ரோஷமாக கத்தினார் சிவக்குமார்.  பொதுமக்கள் அவரை சமாதானம் செய்ய முயன்றனர் ஆனால் அவர் யார் சொல்லையும் கேட்கவில்லை,  ஒரு கட்டத்தில் பதற்றம் பற்றிக்கொண்டது கூட்டம்  திரள ஆரம்பித்தது,  கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் சிவக்குமாரிடம் பேச்சு கொடுப்பதைபோல கொடுத்து திடீரென அவர்மீது பாய்ந்தார். அதில் சிவக்குமார் நிலைதடுமாறி கிழேசாய, அங்கிருந்த மற்ற இளைஞர்கள் சிவக்குமாரை புரட்டி எடுத்தனர்.  அவரது பிடியில் இருந்த ஜனனியும் பத்திரமாக மீட்கப்பட்டார்.

பின்னர் ஒருவழியாக தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட சிவக்குமார் "ஒரு நாளா இருநாளா அவளை நான் மறப்பதற்கு.?  கணவன் மனைவியாக அல்லவா வாழ்ந்தோம்" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "இந்த பெண்களை நம்பி ஆண்கள் இப்படித்தான் மோசம்போகிறார்கள்"  என்று புலம்பினார். பின்னர் சொல்லி வைத்தார்போல் அங்கு வந்த போலீசார் எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனுக்குப் போய் பேசிக்கலாம் வா... என்று சிவக்குமாரை அள்ளிச்சென்றனர்.