கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.கடந்த மாதம் 26ம் தேதி பானு தனது காதலுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

பானுவின் காதலரை சரமாரியாக தாக்கிய அக்கும்பல், சிறுமியை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் கோவை மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் (27), பப்ஸ் கார்த்தி (26), ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயண மூர்த்தி (32) ஆகிய 6 இளைஞர்களை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோவில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன், கார்த்தி, ராகுல் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய மகளிர் போலீசார் மாநகர கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷ்னர் சுமித் சரண் உத்தரவிட்டார். இதையடுத்து மூன்று பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மற்ற மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.