சென்னை சவுகார்பேட்டை பகுதியில் பைனான்ஸ் அதிபர், மனைவி, மகன் ஆகியோர் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டனர். சொத்துக்காக இந்த கொலை நடைபெற்றதாகவும்,  இந்த 3 கொலையும் செய்தது ஷூத்தல் என்பவரின் மனைவி ஜெயமாலா என்பது தெரியவந்துள்ளது. 

சென்னை சவுகார்பேட்டை விநாயகம் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலில்சந்த் (74). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் சென்னையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு புஸ்பாபாய்(70) என்ற மனைவியும், ஷீத்தல்(40) என்ற மகனும், பிங்க் என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு நீண்ட நேரம் தலில் சந்த் வீட்டுக்கு அவரது மகள் பிங்க் போன் செய்துள்ளார். ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகத்தில், வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் உள்ளே சென்று பார்த்தபோது, தலில் சந்த், புஸ்பா பாய், ஷீத்தல் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து யானைகவுனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த 3 கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில்  சொத்து தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்றது ஷூத்தல் என்பவரின் மனைவிதான் என துப்பு துலங்கியுள்ளது. கணவர் ஷூத்தல், மாமனார் தலீல் சந்த், மாமியார் புஷ்பாபாயை சுட்டுகொன்றது ஜெயமாலா என்பது தெரியவந்துள்ளது. ஷூத்தலும், அவரது மனைவி ஜெயமாலாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஜூவனாம்சம் கேட்டு ஜெயமாலா வழக்கு தொடர்ந்ததால் அடிக்கடி மோதல் எழுந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. புனேவில் இருந்து உறவினர்களுடன் நேற்று சென்னை வந்த ஜெயமாலா கொலை செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மூவரையும் கொலை செய்தபிறகு ஜெயமாலா மற்றும் அவரது உறவினர்கள் ரயில் மூலம் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் புனே விரைந்துள்ளனர்.