புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் முதலியார் பேட்டையை சேர்ந்தவர் பிரபாவதி.இவரது வயது 41 .  இவரது கணவர் சிவசக்தி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவசக்தி தனது மனைவி மற்றும் மகள்களை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார். இதனால் இரண்டு மகள்களுடன் தவித்து வந்த பிரபாவதி கூலி வேலைகள் செய்து குடும்பத்தை கவனித்து வந்திருக்கிறார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு தனது மகள்களுடன் பிரபாவதி வீட்டில் இரவு உணவு அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கே லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்த உதயகுமார் என்பவர் பிரபாவதியின் வீட்டிற்கு வந்திருக்கிறார். உதயகுமார் உடன் அவரது நண்பர்கள் 2 பேர் வந்திருக்கின்றனர்.

பிரபாவதியின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த அவர்கள், பிரபாவதியையும் அவரது மகள்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கின்றனர். மேலும் இரண்டு மகள்களில் ஒருவரை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை எதிர்த்த பிரபாவதியின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்திருக்கின்றனர். மேலும் அவரின் வயிற்றில் மூன்று பேரும் காலால் எட்டி உதைத்து இருக்கின்றனர்.

இதனால் நிலை தடுமாறி பிரபாவதி கீழே விழுந்து இருக்கிறார். பின்னர் அங்கிருந்து உதயகுமார் தனது நண்பர்களுடன் வெளியேறிவிட்டார். உதயகுமார் தாக்கியதில் பலத்த காயமடைந்த பிரபாவதி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் பிரபாவதி புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் உதயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 2 போரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.