சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் கௌதம்(23). அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் தீபக்(23) மற்றும் நாகராஜ் மகன் கதிர்(25). இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாக தான் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

மூன்று பேரும் இணைந்து கொலை,கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 27 ம் தேதி அந்த பகுதியில் மூவரும் சேர்ந்து பட்டாசு வெடித்துள்ளனர். அதை அபூபக்கர் என்பவர் தடுத்தாக தெரிகிறது. அதில் தகராறு ஏற்படவே மூன்று பேரும் சேர்ந்து அபூபக்கரை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின் மறுநாள் அதே பகுதியைச் சேர்ந்த சபீர் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி பணப்பறிப்பிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த சம்பந்தமாக வழக்கு பதியப்பட்டு தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். மூவர் மீதும் பல குற்றச்செயல்களுக்கான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் காவல்துறை பரிந்துரை செய்தது. அதன்படி கௌதம், தீபக் மற்றும் கதிர் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.