கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் மூடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவை அன்றி வேறு எக்காரணம் கொண்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியை அவதூறாகவும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே இருக்கும் பாசி பட்டினத்தை சேர்ந்தவர் கனி(47). இவர் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பிரதமர் மோடி குறித்து வன்முறையை தூண்டும் வகையில் அவதூறாக பேசியுள்ளார். அவருக்கு உடந்தையாக இப்ராஹிம்(43), நைனார் பாத்திமா(46) என இருவர் செயல்பட்டுள்ளனர்.

இது வாட்ஸ் அப்பில் வைரலாக வலம் வரவே அப்பகுதி காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவலர்கள் மூவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.