திண்டிவனம் அருகே சொத்துக்காக தாய், தந்தை மற்றும் தம்பியை கொலை செய்தது தொடர்பாக மூத்த மகன் கோவர்தனன் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். ஏசி மின்கசிவால் தீப்பற்றியதாக முதலில் கூறிய நிலையில், கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராய பிள்ளை தெருவைச் சேர்ந்த ராஜ், அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் இளைய மகன் கெளதம் ஆகியோர் வீட்டின் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். 2 நாட்களுக்கு முன்னர் அதிகாலை 3 மணியளவில் அந்த அறையில் தீப்பிடித்து எரிந்து மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஏசி மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தே உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் முதியவர் ராஜீன் உடலில் இருந்து வழிந்த ரத்தம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தீ விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. எரிந்த நிலையில் அறையை விட்டு ராஜ் ஓடி வந்திருப்பதாக கூறப்படுவதால், அவரைத் தப்பிக்க விடக் கூடாது என்று எண்ணி யாராவது தாக்கி இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அறைக்கு அருகில் கிடந்த காலி பெட்ரோல் கேன் போலீசாரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராஜூவுக்கு அதிக சொத்துகள் இருப்பதும் தெரிவந்துள்ளது. ஏற்கனவே சொத்து பிரச்சனை காரணமாக மூத்த மகனுக்கும் பெற்றோருக்கும் தகராறு இருந்து வந்ததாகவும் தகவல் வெளியானது.  

இந்நிலையில் சொத்துப் பிரச்சனையில் ராஜூ, அவரது மனைவி மற்றும் இளைய மகன் என மூவரும் கொலை செய்யப்பட்டுள்ளதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீ எரிந்து கொண்டிருந்த போது பக்கத்தில் அறையில் உறங்கி கொண்டிருந்த மூத்த மகனான கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணையை தொடங்கினர். 

அப்போது தாய், தந்தை மற்றும் தம்பியை கொலை செய்ததை கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி ஒப்புக்கொண்டுள்ளர். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்றும் அவர் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.