சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வெழுதி மோசடி.! ஐடியா கொடுத்தது யார்.? பிடிபட்ட வடமாநிலத்தவர்கள் தகவல்
சிறிய வகை ப்ளூடூத் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி மோசடியாக தேர்வெழுதிய 28 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து தேர்வெழுதியதாக கைது செய்யபட்டவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
சுங்கத்துறை தேர்வில் முறைகேடு
சென்னை சுங்கத் துறை அலுவலகத்தில் கேன்ட்டீன் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கான 17 காலியிடங்களுக்காக தேர்வு அறிவிக்கப்பட்டு, இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1,600 பேர் இந்த எழுத்துத் தேர்வை (அக். 14) நேற்று எழுதினர். சென்னையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்வில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
புளூடூத், கேட்ஜெட்டுகளைப் பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வட மாநிலத்தவர்கள் பலரிடம் காவல்துறை மற்றும் சுங்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.
ப்ளூ டூத் பயன்படுத்தி மோசடி
அப்போது 28 பேர் முறைகேடாக தேர்வு எழுதியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை காது மற்றும் வயிற்றுப்பகுதியில் மறைத்து வைத்த புளூடூத் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்யப்பட்டது. சிறிய வகை ப்ளூடூத் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு பிடிப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், ரயிலில் வந்த போது அரியானாவை சேர்ந்த ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவர் கொடுத்த ஐடியாவின் பேரில் இந்த மோசடியை அரங்கேற்றியதாக தெரிவித்தனர். முறைக்கேட்டில் ஈடுபட்டவர்கள் 10 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி தேர்வை எழுதி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
28 பேர் விடுவிப்பு
மேலும் இந்த தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்து செய்துள்ளனர். கைதான சர்வர்குமாரின் உண்மையான பெயர் துளசியாதவ், அவர் மீது ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளீட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். தேர்தவில் முறைகேட்டில் ஈடுபட்ட 28 பேரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இதனிடையே புளூடூத் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 28 பேரும் இனி எந்த அரசு போட்டி தேர்வுகளிலும் பங்கேற்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
மருத்துவ மாணவி தற்கொலை.. பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது.. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!