2,500 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி! பிளாட், கார் வாங்கி சொகுசாக வாழ்ந்த முக்கியக் குற்றவாளி கைது!
மோசடியில் கிடைத்த பணத்தை வைத்து ஹிமாச்சல், சண்டிகர், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பிளாட்களை வாங்கியிருப்பதும், ஆடம்பர பொருட்கள் மற்றும் உயர் ரக கார்களை வாங்கி வரி ஏய்ப்பு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ரூ.2,500 கோடி கிரிப்டோகரன்சி மோசடியின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவர் கொல்கத்தாவில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த மிலன் கார்க் (35) புதன்கிழமை இரவு கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார். போலி கிரிப்டோகரன்சியை வடிவமைத்து சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கைதான மிலன் கார்க், பின்னர் சிம்லாவுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்த பிறகு துபாய்க்கு தப்பிச் சென்ற கார்க், ஜூன் மாதம் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இன்னும் தலைமறைவாக உள்ள சுபாஷ் சர்மாவின் முக்கிய கூட்டாளியான மிலன் கார்க், கிரிப்டோகரன்சியை வடிவமைத்தல், சாஃப்ட்வேர்களை உருவாக்குதல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய கிரிப்டோகரன்சி தளத்தைத் ஹேக் செய்து 230 மில்லியன் டாலர் திருட்டு
ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றிய இந்த கிரிப்டோகரன்சி மோசடி 2018 இல் தொடங்கியது. மோசடி செய்தவர்கள் வருடக்கணக்கில் முதலீட்டாளர்களை மிரட்டி வைத்திருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 300 பேர் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் 26 பேரை கைது செய்த போலீசார், 70 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கெனவே கைதான முக்கிய குற்றவாளிகளில் ஹேம்ராஜ், சுக்தேவ் இருவரும் மண்டியைச் சேர்ந்தவர்கள். அருண் குலேரியா மற்றும் அபிஷேக் இருவரும் உனாவைச் சேர்ந்தவர்கள்.
குறுகிய காலத்தில் அதிக வருமானம் கிடைக்கும் என்று உறுதியளித்து மக்களைக் கவர்ந்து பல முதலீட்டாளர்களை தங்கள் வலையில் சிக்க வைத்துள்ளனர். இவர்களின் மோசடிக்கு பலிகடா ஆனவர்களில் போலீஸ்காரர்களும் விதி விலக்கு அல்ல.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் மோசடியில் கிடைத்த பணத்தை வைத்து ஹிமாச்சல், சண்டிகர், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பிளாட்களை வாங்கியிருப்பதும், ஆடம்பர பொருட்கள் மற்றும் உயர் ரக கார்களை வாங்கி வரி ஏய்ப்பு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
லீக்கான குளியலறை வீடியோ... மேனேஜரிடம் கோபத்தில் கொப்பளித்த லெஜண்ட் பட நடிகை ஊர்வசி!