குஜராத் மாநிலம், சந்த்கேடா நகரை சேர்ந்தவர் சித்தார்த் மெக்ரா (42). இவரது தந்தை ராணுவ அதிகாரி. இந்த நிலையில், பெண் ஒருவர், சித்தார்த் மீது பணமோசடி புகார் கூறியுள்ளார். தன்னிடம் 50 ஆயிரம் ரூபாயை, சித்தார்த் ஏமாற்றி விட்டதாக புகார் கூறியுள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் சித்தார்த்தை கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை திருமண வலைத்தளம் மூலம் சித்தார்த் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. அதிலும் விவாகரத்தான பெண்களை மட்டுமே குறிவைத்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. 

இந்த விவகாரம் குறித்து, சைபர் க்ரைம் அதிகாரி ராஜ்தீப்சிங் கூறும்போது, பல வலைத்தளங்களில் இருந்து அழகான ஆண்களின் புகைப்படங்களை எடுத்து, தனது முகத்தை வைத்து, திருமண வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் சித்தார்த். தன்னை ராணுவ மேஜராக அடையாளப்படுத்திய சித்தார்த், இணையத்தில் பதிவு செய்திருக்கும் விவாகரத்தான பெண்களைத் தேர்ந்தெடுத்து ஏமாற்றியுள்ளார். சித்தார்த், 25 மாநிலங்களைச் சேர்ந்த 50 பெண்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. 

சித்தார்த் மீது புகார் அளித்த பெண்ணையும் அவர் ஏமாற்றியுள்ளார். அதன் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம். புகார் கொடுத்த பெண்ணிடம் திருமணத்துக்கு விருப்பம் தெரிவித்த சித்தார்த், ராணுவ வீட்டு திட்டத்தின்கீழ் ரூ.50,000 வேண்டும என்று கேட்டுள்ளார். சித்தார்த்தை நம்பிய அவரும் பணத்தை கொடுத்துள்ளார். அதன் பிறகு, அனைத்து தொடர்புகளையும் துண்டித்த சித்தார்த் மீது, பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறினார். அதன் பிறகு நடத்திய விசாரணையில் சித்தார்த்தை கைது செய்ததாக ராஜ்தீப்சிங் தெரிவித்தார்.