அரியானாவில் தேர்வு எழுத வந்த கல்லூரி மாணவி  நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம், பரிதாபாத் மாவட்டம், பல்லாப்கர் பகுதியை சேர்ந்தவர் நிகிதா தோமர் (21). அங்குள்ள கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு  தோழியுடன் பேசியபடி கல்லூரியை விட்டு வெளியே வந்தார். அப்போது, காரில் வந்த தவ்ஷீப் அந்த மாணவியை காருக்குள் இழுத்து போட்டு கடத்த முயன்றனர். இதனால் சுதாரித்த மாணவி, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தவ்ஷீப் மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு நண்பர்களுடன் தப்பி சென்றுவிட்டார். இதில், படுகாயமடைந்து நிகிதா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே, கல்லூரி மாணவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கல்லூரி அருகே மாணவி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.