கால்சென்டர் பெண் ஊழியர் கற்பழித்து கொடூரமாக கொல்லப்பட்ட  வழக்கில் 2 குற்றவாளிகளின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைத்து மும்பை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.

புனேயில் உள்ள விப்ரோ கால்சென்டரில் ஊழியராக வேலை பார்த்து வந்த 22 வயது இளம் பெண் ஹம்சலேகா சம்பவத்தன்று ஈவினிங் ஷிப்ட் முடிந்து நிறுவனத்தின் ஒப்பந்த காரில் வீடு திரும்பினார். அப்போது கார் டிரைவர் புருசோத்தம் போரடேயுடன், அவரது நண்பர் பிரதீப் கோகடேயும் பயணித்தார்.

அவர்கள் இளம் பெண்ணை அவரது வீட்டுக்கு செல்லும் வழியில் செல்லாமல் புறநகர் பகுதிக்கு காரை ஓட்டிச் சென்றனர். அப்போது ஒதுக்குபுறமான பகுதிக்கு கடத்தி சென்று அந்த இளம் பெண்ணை காரிலிருந்து கட்டாயமாக வெளியே இழுத்து போட்டு மாறி மாறி கற்பழித்தனர். இதனையடுத்து அவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பினர். கடந்த 2007 ம் ஆண்டு நடந்த இந்த கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீசார் கார் டிரைவர் புருசோத்தம் போரடே மற்றும் பிரதீப் கோகடே ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது புனே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை ஐகோர்ட்டும், 2015-ம் ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டும் அவர்களது தூக்கு தண்டனையை உறுதி செய்தன. இதையடுத்து அவர்கள் இருவரும் கருணை மனு அளித்தனர். இந்த மனுக்களை 2016-ம் ஆண்டு மராட்டிய கவர்னரும், 2017-ம் ஆண்டு ஜனாதிபதியும் நிராகரித்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 24-ந் தேதி குற்றவாளிகள் இருவரையும் தூக்கில் போட புனே கோர்ட்டு வாரண்ட் பிறப்பித்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில், அவர்கள் மும்பை ஐகோர்ட்க்கு சென்றனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தங்களது தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அதிகப்படியான காலதாமதம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாகி 4 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதிக்கப்பட்டதால், அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஏராளமான துன்பத்தையும், மன வேதனையையும் அனுபவித்து வருகிறோம். இந்த பிரச்சினையில் எங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு உள்ளன. எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்து தண்டனையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள், குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. இந்த மனு நேற்று நீதிபதிகள் தர்மாதிகாரி, சுவப்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அதிகப்படியான தாமதத்தை கருத்தில் கொண்டு, தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால் குற்றவாளிகளான புருசோத்தம் போரடே, பிரதீப் கோகடே ஆகிய இருவரும் தூக்கு தண்டனையிலிருந்து இருந்து தப்பினர். அதாவது குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்ட காலம் முதல் 35 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது .