Asianet News TamilAsianet News Tamil

சிறுமிகளை நாசம் செய்த கிருஸ்தவ மதபோதகர் அருள்தாஸுக்கு 30 ஆண்டுகள் சிறை... இருவருக்கு நான்கு ஆயுள் தண்டனை!

பள்ளி மாணவிகள் இருவரை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் கிருஸ்தவ மதபோதகர் அருள்தாஸுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 

2 school students In the case of adultery accused convicted
Author
Tamil Nadu, First Published Jan 7, 2019, 2:29 PM IST

பள்ளி மாணவிகள் இருவரை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் கிருஸ்தவ மதபோதகர் அருள்தாஸுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும், 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி ஒருவரும் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர். இவர்களில் 13 வயது மாணவி தனது பெற்றோரை இழந்தவர். ஆகையால் அவரது பாட்டியின் பராமரிப்பில் தங்கி படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள இட்லி கடைக்கு சென்று பலகாரங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். ஒருநாள் 13 வயது மாணவி பலகாரம் வாங்குவதற்காக இட்லி கடைக்கு சென்ற போது இட்லி கடை உரிமையாளரான செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமி அவரது கள்ளக்காதலனான திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த டவர் என்ற ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டனர்.2 school students In the case of adultery accused convicted

இதனால், அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தனது லீலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி, ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருக்க வைத்திருக்கிறாள். அதன்பிறகு ஆனந்தராஜ் பலமுறை மிரட்டி அந்த மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததோடு, தனது நண்பர்களான திட்டக்குடியைச் சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ்,  மதிவாணன் ஆகியோருக்கும் மாணவியை விருந்தாக்கியுள்ளான்.

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி தனலட்சுமியிடம் கூறி கதறி அழுதார். பின்னர் தனலட்சுமி மிரட்டியதால் தனது 14 வயது தோழியையும் தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அந்த மாணவியும் ஆனந்தராஜின் காமப்பசிக்கு இரையாகி இருக்கிறாள். பின்னர் தனலட்சுமி மாணவிகள் இருவரையும் விருத்தாசலத்தில் உள்ள விபசார புரோக்கர் கலாவின் வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.2 school students In the case of adultery accused convicted

அதன்பிறகு கலா இருவரையும் திட்டக்குடியைச் சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவர் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். அங்கு அவர் 13 வயது மாணவியுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதேபோல் கலாவும், தனலட்சுமியும், சக புரோக்கர்களும் இரு மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், கடலூர் மாவட்டம் வடலூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று லாட்ஜிலும், வாடகை வீடுகளிலும் தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

கடைசியாக வடலூரில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோருக்கு மாணவிகள் விற்கப்பட்டனர். அவர்கள் இரு மாணவிகளையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ஒருநாள் இரவில் மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பி திட்டக்குடிக்கு சென்று போலீசில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 10 பெண்கள் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் இடையாக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி. விருத்தாசலம் நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த கலா. திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமி. மதபோதகர் அருள்தாஸ்,  ஊ.மங்கலம் காட்டுக்கூனங்குறிச்சி ஸ்ரீதர். வளவனூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவரின் மனைவி பாத்திமா. பண்ருட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி மகா என்ற மகாலட்சுமி. நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை ராதா என்ற கிரிஜா, விருத்தாசலம் ஷர்மிளாபேகம் உள்ளிட்ட 19 பேர் மீது ‘போக்சோ’ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று 14 வயது மாணவியின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 4-7-2016 அன்றைய தேதி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி. சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா மேற்பார்வையில் கடலூர் இன்ஸ்பெக்டர் தீபா விசாரணை நடத்தி 19 பேர் மீதும் கடலூர் மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.2 school students In the case of adultery accused convicted

இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி 17 பேரையும் அடையாளம் காட்டினார்கள். சிறைச்சாலையில் நடந்த அடையாள அணி வகுப்பிலும் இரு மாணவிகளும் 17 பேரையும் அடையாளம் காட்டினர். இந்த வழக்கு விசாரணை நடைபெறும் போது, பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் பாதுகாப்பு கருதி சென்னையில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவி மேல்படிப்பு படிக்கிறார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி லிங்கேஸ்வரன்ன் கடந்த 4ம் தேதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகா என்ற மகாலட்சுமி என்பவர் சதீஷ்குமாரால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை மட்டும் விடுதலை செய்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார். மதபோதகர் அருள்தாஸ் உள்பட மற்ற 16 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இன்று தண்டனை விபரத்தை அறிவித்த நீதிபதி லிங்கேஸ்வரன் மதபோதகர் அருள்தாஸுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்தார். ஸ்ரீதர், பாத்திமா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 42 வருட சிறையும்,  ஆனந்தராஜ், பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு 4 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.  குற்றவாளி செல்வராஜூக்கு 3 ஆயுள் தண்டனை. மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios