சென்னையில் பட்டப்பகலில் 2 ரவுடிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. லாரிக்கு அவர்கள் வழி விடாதபடி சென்றதால் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், கடப்பேரி, அற்புதம் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் (எ) சின்ன அப்புனு (30). இவருக்கு திருமணம் ஆகி நதியா என்ற மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கிழக்கு தாம்பரம், ஆதிநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (எ) புட்டி சுரேஷ் (29). புட்டி சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அற்புதம் நகர் பகுதியில் இருந்து கிழக்கு தாம்பரம், ஆதிநகர் பகுதிக்கு குடியேறினார். இதில் நண்பர்களான பிரதீப்குமார், சுரேஷ் மீது அடிதடி, வழிப்பறி போன்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. இதில் புட்டி சுரேஷ் என்பவர் குண்டாஸ் வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த  சிலநாட்களாக பிரதீப்குமாருக்கும் அற்புதம் நகர் மற்றும் கடப்பேரி பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. ஆகையால், அவர்களை கொலை செய்யும் திட்டத்துடன் சுரேஷ் (எ) புட்டி சுரேஷ் குரூப் இருந்து வந்தது. இதனால், எப்போதும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றித்திருந்ததால் அப்பகுதி மக்கள் பீதியிலே இருந்து வந்தனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் கடப்பேரி அருகே உள்ள பர்மா காலனி பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பிரதீப்குமார் மற்றும் அவரது நண்பர்கள் வந்துள்ளனர். அப்போது, பின்னால் வந்த லாரிக்கு வழிவிடாமல் அடாவடியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, லாரி டிரைவர் ரங்கநாதன் அவர்களிடம் வழி விட்டு செல்லுங்கள் என கூறியுள்ளார். அப்போது, பிரதீப்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ரங்கநாதன் கடுமையாக தாக்கி உள்ளனர்.

 

பின்னர், ரங்கநாதனின் உறவினர் தான் மற்றொரு ரவுடியான காக்கா முட்டை (எ) பாபு.  ரங்கநாதன் தாக்கப்பட்டதை அறிந்த அந்த கும்பல் பிரதீப்குமாரின் தந்தை சுகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் இருதரப்பினர் இடையே மீண்டும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தந்தையை தாக்கியதால் கொலை வெறியுடன் அப்பகுதியில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்து வந்தார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து பிரதீப்குமாரின் வீட்டிற்கு சென்று மனைவியிடம் விசாரணை நடத்தினர். 

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பிரதீப்குமார் அவரது நண்பர் சுரேசுடன் தன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் இருவரையும் அற்புதம் நகரில் வழிமறித்து இருவரையும் சரமாரியாக வெட்டி சாய்தனர். அப்போது அதை பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள காக்கா முட்டை (எ) பாபு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.