சென்னையை அடுத்த வண்டலூர் அருகே அதிமுக பிரமுகர் வழக்கில் தொடர்புடைய ரவுடி ஸ்ரீதர் தலை, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் விஜிபி திடல் உள்ளது. அங்கு சாலையோரத்தில் டாடா சுமோ கார் ஒன்று ரத்தக் கரை படிந்த நிலையில் நின்றுக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர். கொலை செய்யப்பட்டது யார் என்பது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தினர். 

இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் விஜிபி திடலில் ரவுடி ஸ்ரீதர் உடல் முகம், தலை சிதைக்கப்பட்ட நிலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த ரவுடி ஸ்ரீதர், இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரப்பாக்கம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறை சென்றார். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். பின்னர் ஸ்ரீதர் மற்றும் அவருடைய நண்பர் ஒருவரும் நேற்று மதுராந்தகம் சென்று மற்றொரு ரவுடியை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. 

ஸ்ரீதரை போட்டு தள்ள இதுதான் தகுந்த சமையம் என்பதால் கொல்லப்பட்ட பெருமாளின் ஆட்கள் காத்திருந்தனர். பின்னர் ரவுடி ஸ்ரீதர் மற்றும் அவரது நண்பர் இருவரையும் காரில் கடத்தி சென்று பழிக்கு பழியாக ஸ்ரீதரை கொலை செய்தனர். தொடர்ந்து அவரது உடலை ஊரப்பாக்கம் அருகே உள்ள வி.ஜி.பி திடலில் வீசி விட்டுச் சென்றுள்ளனர். அந்த காரில் 2 பேர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் படாளம் ரவுடி ராமமூர்த்தி போலீசார் விசாரணை நடத்தினர் அந்த விசாரணையில் பெருமாள் கொலைக்கு பழி வாங்குவதற்காக ஸ்ரீதரை கொலை செய்து ஊரப்பாக்கத்தில் வீசியதாக ராமமூர்த்தி கூறியுள்ளார். மேலும் ஸ்ரீதருடன் வந்த நண்பரையும் கொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ராமமூர்த்தியை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, ஸ்ரீதருடன் வந்த நபர் யார் என்றும், அவரது உடலைத் தேடும் பணியில் கூடுவாஞ்சேரி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.