வேலியே பயிரை மேய்ந்த கதையாய்..! கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட காவலர்கள் அதிரடி கைது ..வாக்குமூலத்தில் பகீர்..
சென்னையில் கஞ்சா விற்பனைக்கும் துணை போன புகாரில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கஞ்சா விற்பனைக்கும் துணை போன புகாரில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை முகப்பேரை சேர்ந்த திலீப் குமார் என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக உள்ளார். இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த புகாரின் பேரில் போலீசார் இவரை கைது செய்தனர் . மேலும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக சென்னை அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் திலீப் குமார் என்பவரை கைது செய்தனர்.
இதனிடையில் இவரிடம் கஞ்சா எப்படி வந்தது..? யார் கொடுத்தது..? எனும் கோணங்களில் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது ரயில்வே காவல்துறை டி.எஸ்.பி அலுவலகத்தில் உதவி ரைட்டராக வேலை பார்க்கும் சக்திவேல் என்ற காவலரும், டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவில் வேலைபார்க்கும் செல்வகுமார் என்ற காவலரும் கஞ்சா விற்பனைக்கும் உடந்தையாக இருந்த அதிர்ச்சி தகவலை வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.
இதனையடுத்து கஞ்சா விற்பனைக்கு துணை போன புகாரில் 2 காவலர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிடிபடும் கஞ்சாவை தான் மறைத்து எடுத்து வந்து விற்பனை செய்யப்பட்டதா? அல்லது கஞ்சா கும்பலுடன் இவருக்கு வேறேதும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட கோணங்களில் தனிப்படை போலீசார் கைதான காவலர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் கடந்த 7 ஆம் தேதி ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் 1 கிலோ கஞ்சாவை மட்டும் காவலர் சக்திவேல் ,மறைத்து எடுத்து வந்த தீலீப்குமாரிடம் விற்க சொல்லி கொடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: பைக் வச்சு மடக்கி இருக்கோம், எதுவுமே இல்லையா? ஆத்திரத்தில் சிறுவனை தாக்கிய கொள்ளைர்கள்..!