கரூரில் குளத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலரும், அவரது தந்தையும் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி உள்ள 40 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தை அதே கிராமத்தை சேர்ந்த சுமார் 50 பேர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பூ வியாபாரியான நல்லதம்பி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அண்மையில் உத்தரவிட்டது.

 

இந்நிலையில், நேற்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் சென்று குளத்தை அளவீடு செய்துள்ளனர். அப்போது, நல்லதம்பியும் அவரது தந்தை வீரமலையும் ஆக்கிரமிப்பு பகுதிகளை வருவாய்த்துறையினருக்கு அடையாளம் காட்டி உள்ளனர். 

இந்நிலையில், இன்று காலை நல்லதம்பி தனது வயலுக்கு பூ பறிக்க சென்றுள்ளார். பூ பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்ப வந்துக்கொண்டிருந்த போது அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் நல்லதம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரம் தீராத அந்த கும்பல் நல்லதம்பியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை வீரமலையையும் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரண்டு பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்லதம்பியின் வழக்கால் பாதிக்கப்பட்ட அதே ஊரைச் சேர்ந்த நபர்கள் இந்த கொலையை செய்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொலை சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.