திருச்சியில் இரண்டரை மாத குழந்தை இறந்த விவகாரத்தில் சரிவர தாய்பால் குடிக்காத காரணத்தினால் குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சியில் இரண்டரை மாத குழந்தை இறந்த விவகாரத்தில் சரிவர தாய்பால் குடிக்காத காரணத்தினால் குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் – சாந்தி தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக கடந்த அக்டோபர் மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே பிரசவம் முடிந்த நிலையில் சாந்தி முத்தையநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். அப்போது கடந்த சில நாட்களாக குழந்தை சரிவர தாய்ப்பால் குடிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் குழந்தை தாய்பால் குடிக்காமல் இருந்ததால் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டு, ஓயாமல் அழுதுக்கொண்டு இருந்ததாக சொல்லபடுகிறது.
இதனையடுத்து குழந்தைக்கு வயிற்று வலி சரியாக இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அடுத்த சில நாள்களிலே குழந்தைக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் பதறிபோய் குழந்தையை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் உடல்நல குறைவு ஏற்பட்ட குழந்தையை மேல்சிகிச்சையாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு 40 நாள் தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி இரண்டரை மாத குழந்தை பரிதாபமாக டிசம்பர் 30-ம் தேதி அன்று உயிரிழந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஜம்புநாதபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தையின் தாய் சாந்தியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கைக்குழந்தை சரிவர தாய்பால் குடிக்காத காரணத்தால் குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுத்தது தெரியவந்துள்ளது. இது தான் குழந்தையின் இறப்பிற்கு காரணம் என்று காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுமக்கள் தவறான சிகிச்சை முறைகளை தாங்களே கையாள்வதும் உடல்நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வரும் முதியவர்கள் , பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் உரிய கல்வித்தகுதி இல்லாமல், முறையான பயிற்சி பெறாமல் தவறான சிகிச்சை அளிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.
உரிய அங்கீகாரம் இல்லாமால் தவறான மருத்துவ சிகிச்சை அளித்து அதன்காரணமாக நோயாளிகள் உயிர் இழக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
