தேனி மாவட்டம் போடி அருகே இருக்கும் எஸ்.எஸ் புரத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி லட்சுமி வயது 36. இந்த தம்பதியினருக்கு அனுசியா 19, ஐஸ்வர்யா 15 , அட்சயா 10 என மகள்கள் இருக்கின்றனர். பால்பாண்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்து இருக்கிறார். இதனால் மூன்று மகள்களுடன் தனியாக வசித்து வந்த லட்சுமி கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்தி உள்ளார்.

இந்த நிலையில் வறுமை அதிகமாக அவர்களை பாதித்திருக்கிறது. மூன்று மகள்களையும் படிக்க வைக்கவும் பணம் இல்லாமல் தவித்து வந்திருக்கிறார் லட்சுமி. கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் பணம் தினமும் சாப்பிடுவதற்கே சரியாக இருந்திருக்கிறது. அவரது உறவினர்களும் யாரும் அவர்களுக்கு உதவவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லட்சுமி தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார்.

தான் தற்கொலை செய்த பிறகு தனது மகள்கள் தனியாக சிரமப்படுவதை விரும்பாத அவர் அவர்களையும் தற்கொலை செய்து கொள்ள கூறியிருக்கிறார். அதன்படி நான்கு பேரும் தற்கொலை செய்து பால்பாண்டி இருக்கும் இடத்திற்கே சென்று விடலாம் என முடிவு செய்து இருக்கின்றனர். விஷம் வாங்கிய அவர்கள் வீட்டில் வைத்து குடித்துள்ளனர். விஷம் குடித்த பிறகு ஒருவர் பின் ஒருவராக மயக்கமடைந்து இருக்கின்றனர். 

லட்சுமியின் வீட்டிலிருந்து வினோதமாக முனங்கள் சத்தம் கேட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்திருக்கின்றனர். அங்கே நான்கு பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அனுசியா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சுமி மற்றும் அட்சயா ஆகியோர் உயிருக்கு மிக ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த போடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.