பெற்ற 2 மகள்களின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி, கொடூரமாக கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாதன். கூலி தொழிலாளி.இவரது மனைவி செல்வராணி. மாற்றுத் திறனாளி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு ஹேமவர்சினி, ஸ்ரீஜா ஆகிய மகள்கள் உள்ளனர். பத்மநாதனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால், அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்துள்ளார். 

மேலும், மனைவியிடம் பணத்தை வாங்கி, மது குடித்துவிட்டு வருவார். அப்போது குடும்பத்தில் தகராறு ஏற்படும். இது தொடர்கதையாகவே நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு பத்மநாதன் போதையில் வீட்டுக்கு சென்றார். அப்போது, மனைவி செல்வராணியிடம், பணம் கேட்டு தகராறு செய்தார். மேலும், அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று, ரூ.75 ஆயிரம் வாங்கி வரும்படி கேட்டு அடித்து உதைத்துள்ளார். இதனால், மனவேதனை அடைந்த செல்வராணி, கோபித்து கொண்டு, தனது தாய் வீட்டுககு சென்றார்.

இதையடுத்து பத்மநாதன், வீட்டிலேயே இருந்துவிட்டார். நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 மகள்களையும், குடிபோதையில் இருந்த பத்மநாதன் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்தார். பின்னர், அங்கிருந்து தப்பிவிட்டார். இன்று காலையில் வீடு திரும்பிய செல்வராணி, மகள்கள் சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

தகவலறிந்து, சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பத்மநாதனை வலைவீசி தேடி வருகின்றனர்.