பெங்களூருவில் உள்ள ராஜாஜிநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தவர் ஜெய் குமார் ஜெய்ன். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் 18-வயதாகும் பிரவீன் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவி பிரவீன் உடன் ஒரு வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். இது ஜெய்குமாருக்கு எப்படியோ தெரிந்து விட்டது. மகளை கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த மாணவி, பிரவீனுடன் ஊர் சுற்ற அப்பா தடையாக இருக்கிறார். அவரை தீர்த்துக் கட்டினால் மட்டுமே தடையின்றி ஊர்சுற்ற முடியும் என்று நினைத்துள்ளார். தனது எண்ணம் குறித்து பிரவீனுடன்  தெரிவித்துள்ளார். அவனும் சம்மதம் தெரிவித்துள்ளான்.

தந்தையை கொலை செய்ய தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் மாணவி. அதற்கு நேற்று வாய்ப்பு அமைந்தது. பாண்டிச்சேரியில் உள்ள ஒரு திருமண விழாவிற்கு ஜெய் குமார் தனது மனைவி மற்றும் மகனை ரெயில் மூலம் அனுப்பி வைத்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்தார்.

தனியாக வீட்டில் இருக்கும் தந்தையை கொலை செய்ய இதுவே சரியான நேரம் என்று கருதிய அந்த மாணவி, தந்தையிடம் அன்பாக பேசியுள்ளார். அப்போது தூக்க மாத்திரை கலந்து பாலை குடியுங்கள் என்று கொடுக்க, மகள்தானே தருகிறாள் என்று, மகளின் கொடூர திட்டத்தை அறியாத தந்தை குடித்துள்ளார்.

குடித்ததும் ஜெய் குமார் மயக்கம் அடைய, தனது திட்டத்தை அந்த மாணவி நிறைவேற்ற தொடங்கினார். பிரவீனை வீட்டிற்கு அழைத்துள்ளார். அவனது துணையுடன் தந்தையை 10 முறை கத்தியால் குத்தியுள்ளார்.

கத்தியால் குத்தியும் ஆத்திரம் தீராத அந்த மாணவி பிரவீன் துணையுடன் குளியல் அறைக்குள் இழுத்துச் சென்று தீவைத்து கொளுத்தியுள்ளார்.
புகை வெளியில் வர அருகில் வசித்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டிற்குள் சென்று பார்க்கும்போது பாதி எரிந்த நிலையில் ஜெய் குமார் பிணமாக கிடந்தார்.

பின்னர் இருவரிடமும் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர். 10-ம் வகுப்பு படிக்கும்போதே ஆண் நண்பருடனான தொடர்புக்காக தந்தையை கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.