சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் இந்திராணி. இவருக்கு மாதேஷ் என்பவர் பேஸ் புக் மூலம் பழக்கமானார். இந்திராணியிடம் பிட்காயின் என்ற வாவ்காயின் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் மாதேஷ். அண்ணா நகரில் வசித்து வரும் பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைன்ட் ஜோசப் ஆகியோர் ஆன்லைனில் வாவ் காயின் முதலீடு செய்ய உதவுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். சுமார் 10 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகையின் மதிப்பு சுமார் ஆயிரம் மடங்காக உயரும் என இந்திராணியின் ஆசையை தூண்டியதாக தெரிகிறது.

இதை நம்பி 18 லட்சம் ரூபாயை பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைன்ட் ஜோசப் உள்ளிட்டோர் நடத்திவரும் நிறுவன வங்கி கணக்கிற்கு இந்திராணி அடிக்கடி அனுப்பியுள்ளார். கடந்த 6 மாதத்திற்கு மட்டும் முதலீடாக போட்ட 18 லட்சம் ரூபாய் திரும்பக் கிடைக்கும் எனக் கூறிய நிலையில் பல மாதங்களாகியும் அந்த பணம் கிடைக்கவே இல்லை. இதன் பின்னர் விசாரித்த பொழுது இந்திராணியிடம் இருந்து வாங்கிய பணத்தை எந்த கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்யாமல் ஏமாற்றியது தெரிகிறது.

  
பணத்தை திரும்ப கேட்ட பொழுது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் புகார் அளித்த போது வழக்குப்பதிவு செய்யாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திராணி அளித்த மனுவில் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மோசடி பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டு பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைன்ட் ஜோசப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து தலைமறைவாக இருந்த மூன்றுபேரையும் போலீசார் தேடிவந்தனர். மேலும் விமான நிலையங்களின் மூலம் தப்பிச் செல்லாத வண்ணம் தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்று சென்னை விமானநிலையத்தில் இருந்து மலேசியா தப்பிச்செல்ல பத்மஜ் பொம்முசட்டி சீனிவாசலு முயன்றுள்ளார். இவரை அடையாளம் கண்ட விமானநிலைய அதிகாரிகள் அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அண்ணாநகர் போலீசார் விமான நிலையத்திற்கு சென்று மோசடியில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடு தப்ப முயன்ற பத்மஜ் பொம்முசட்டி சீனிவாசலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.