திருநெல்வேலியிலுள்ள சிறுவர்  சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த வேல்ராஜ் எனும் சிறுவன் சமீபத்தில் இறந்து போனான். ’தன் மீதான வழக்கு பற்றிய அவமானம் தாங்காமல் பூச்சி மருந்து குடிச்சு செத்துட்டான்’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் சிறுவனின் பெற்றோர் இதை மறுக்க, அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சமூக அமைப்பு ஒன்று போராட்டத்தில் குதிக்க, ‘இது தற்கொலை அல்ல, குரூரமான கொலை’ என்று இப்போது விவகாரம் வேறு ரூட்டில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. விசாரித்தால் வெளிவரும் தகவல் இதுதான்....திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, கீழப்புலியூர் அருகே மேலப்பாட்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சிறுவன் வேல்ராஜ். 17 வயதான இவன் கூலி வேலை பார்த்து வந்திருக்கிறான். இதே ஊரை சேர்ந்த பச்சாத்தா எனும் 52 வயது பெண் சமீபத்தில் வேல்ராஜ் மீது போலீஸில் பாலியல் புகார் கொடுத்திருக்கிறார். 

மறுநாள் வேல்ராஜை பிடித்து, அந்தப் பெண்ணின் உறவினர்கள் தென்காசி போலீஸில் கொடுத்துள்ளனர். அங்கிருந்த போலீஸோ ‘அண்ணாச்சி இந்தா ஊரு எங்க ஸ்டேஷன் லிமிட்ல வராதுல்லா. நீங்க சாம்பவர் வடகரை ஸ்டேஷனுக்கு போங்க.’ என்று அனுப்பியிருக்கின்றனர். 
அங்கே பையனை அழைத்துச் சென்ற நபர்கள் ‘இந்தப் பய கேவலமான வேலையை பார்க்க நினைச்சிருக்காம். அந்த பொம்பள போலீஸ்ல புகார் கொடுத்து, கேஸ் ஆனதும் பயந்து போயி, கேவலம் தாங்காம பூச்சி மருந்தை குடிச்சுட்டான்’ என்று சொல்லியிருக்கின்றனர். போலீஸும் அந்த சிறுவனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஏதோ ட்ரீட்மெண்ட் கொடுத்துவிட்டு அன்று இரவே சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.

சரியான ட்ரீட்மெண்ட் இல்லாததால் வாந்தி, பேதி, வயிறு வலி என்று துடித்தவன் சில நாட்களில் செத்தே விட்டான். வேல்ராஜின் மரணத்தை ‘தற்கொலை’ என்று போலீஸும், பச்சாத்தாவின் உறவினர்களும் கொண்டு போக, பையனின் பெற்றோர் உள்ளிட்ட தரப்போ ‘இது கொலை’ என்கிறது. இந்த விவகாரத்தில் வேல்ராஜ் மரணத்துக்கு நீதி வேண்டி போராடுகிறது ஆதி தமிழர் பேரவை. இதன் திருநெல்வேலி மாவட்ட செயலாளரான கலைக்கண்ணன் “நல்லா விசாரிச்ச பிறகுதான் இதுல உள்ள குரூரமான உண்மைகள் தெரியுது. அதாவது சீர்திருத்த பள்ளியிலிருந்த வேல்ராஜை அவனோட பெத்தவங்க பார்க்க போயிருந்தப்ப நிறைய தகவலை சொல்லியிருக்கான்.

 

அதாவது தென்காசி ஸ்டேஷன்ல இருந்து சாம்பவர் வடகரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போறப்ப வழியில ஒரு காட்டுப் பகுதியில் வெச்சு தன்னை பச்சாத்தாவின் உறவுக்காரங்க அடிச்சு நொறுக்குனதா சொல்லியிருக்கான். காட்டுத்தனமா அடிச்சு, வயிற்றிக் மிதிச்சு, உடம்பில் சில பாகங்களை பிடிச்சு நசுக்கவும் செஞ்சாங்கன்னு சொல்லியிருக்கான். அதன் பிறகு சாம்பவர் வடகரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாங்கன்னும் அங்கே போலீஸும் தன்னை தாக்கியதாகவும், யாரோ தன்னோட வாயில் எதையோ ஊத்தினாங்கன்னும் சொல்லியிருக்கான். 
விஷம் குடிச்ச சிறுவனை சின்னதா ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு, உடனடியா டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போக வேண்டிய அவசியமென்ன போலீஸுக்கு? இது குரூரமான கொலைன்னே புரியுது. 

எங்கள் போராட்டத்தை தொடர்ந்து தனி நீதிபதி நியமனம் செய்து விசாரணை நடக்க இருக்குது. அதில் உண்மைகள் வெளியே வரும்.” என்கிறார். போலீஸோ...இந்த சின்னப்பையன் பச்சாத்தா வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கான். இதை உறவுக்காரங்க கண்டிச்சும் கேட்கலை. இதனால் புகார் கொடுத்தாங்க. பாலியல் புகார்ங்கிறதாலே அவமானப்பட்டு பூச்சி மருந்து குடிச்சுட்டான். அவன் குடிச்ச பாய்ஸன் அளவு குறைவுங்கிறதாலே டாக்டர்கள் அன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க! இதுல எங்க மேலே எந்த தப்புமில்லை! என்கிறார்கள். 
பார்ப்போம்.