ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 16 வயது சிறுமியை கடத்திச் சென்று கணவனுக்கு திருமணம் செய்துவைத்த பெண்ணும் அவரது கணவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கைது செய்துள்ளனர். 

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தைச் சோந்த ராமசாமி மகன் அசோக்குமார் (35). இவருக்கு செல்லக்கிளி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனா். ஆனால், தம்பதியருக்கு ஆண் குழந்தை இல்லாத வருத்தத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், அசோக்குமாருக்கு 2-வது திருமணம் செய்ய மனைவி செல்லக்கிளி முடிவு செய்தார். மனைவியே ஆசைப்படும்போது வாய்ப்பைத் தவற விடக்கூடாது என அசோக்குமார் காத்திருந்துள்ளான். இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் 10-ம் வகுப்பு மட்டும் முடித்துவிட்டு வறுமை காரணமாக கூலி வேலைக்குச் சென்று வந்த 16 வயது சிறுமி, இவர்களோடு சகஜமாக பழகி வந்துள்ளார்.

சிறுமியை எப்படியாவது கணவனுக்கு திருமணம் செய்துவைத்துவிட செல்லக்கிளி முடிவு செய்த நிலையில், சிறுமியுடன் அசோக்குமாரும் நெருங்கிப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் “ஆண் வாரிசு இல்லாததால் என் மனைவியே உன்னை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார்” என்று சிறுமியிடம் கூறிய அசோக்குமார், தன்னை திருமணம் செய்துகொண்டால் வசதியாக வாழ வைப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி செல்லக்கிளி அந்தச் சிறுமியின் பெற்றோரிடம் அவரை கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். பின்னா்  கணவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னா், பெண்ணாடம் அருகே உள்ள கோனூா் கிராமத்துக்கு அந்தச் சிறுமியை அசோக்குமாருடன் அனுப்பி வைத்தார். அங்கு இரு தினங்களாக சிறுமியை அசோக்குமார் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனிடையே சிறுமி குறித்து செல்லக்கிளியை தொடர்பு கொண்டு கேட்டபோது, சரியாக பதிலளிக்காததால் போலீசில் புகாரளித்துள்ளார் அவரது தந்தை. விசாரணையில் இறங்கிய போலீசார், கோனூரில் மூவரும் தங்கியிருப்பதை அறிந்து அழைத்து வந்தனர். பின்னர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து, சீரழித்த குற்றத்துக்காக கணவன், மனைவி இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.