நண்பனை கொல்ல ஸ்கெட்ச் போட்டதால், தப்பிய ரவுடியின் கூட்டாளிகள் பிளான் போட்டு சம்பவம் செய்தது வியாசர்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடி, சுந்தரம் தெருவை சேர்ந்த ராசையா அந்த ஏரியாவில் மிகப்பெரிய பிரபல ரவுடி. இவர் மீது வியாசர்பாடி, எம்.கே.பி நகர் மற்றும் புளியந்தோப்பு ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி, பிக்பாக்கெட் வழக்குகள் உள்ளது. இவரது கூட்டாளிகளுக்கும் வியாசர்பாடி, கல்யாணபுரத்தை சேர்ந்த கோகுல்நாத்  என்கிற ரவுடிக்கும் ரோட்டோரம் இருக்கும் தள்ளுவண்டி கடைகளில் 5 ரூபாய், பத்துரூபாய் என மிரட்டி மாமூல் வாங்குவதில் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், கோகுல்நாத் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டு வாசலில் நின்றிருந்த ராசையாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ராசையா அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார். இதையடுத்து, ராசையாவின் 6 கூட்டாளிகளும் கோகுல்நாத்தை வலைவீசி தேடி வந்தனர்.

பின்னர், அன்றிரவு 10 மணியளவில் வியாசர்பாடி, தேசிகானந்தபுரம் பகுதியில் நின்றிருந்த கோகுல்நாத்தை ராசையாவின் கூட்டாளிகள் சுற்றி வளைத்து, ஓடஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் கோகுல்நாத்தின் தலை, முகம் மற்றும் இடது காலில் பலத்த வெட்டு விழுந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

தகவலறிந்து புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரண் தேஜாஸ்ரீ, எம்கேபி நகர் உதவி கமிஷனர் அழகேசன் மற்றும் வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு படுகாயம் அடைந்த கோகுல்நாத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  கோகுல்நாத் பரிதாபமாக பலியானார். 

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் , ராசய்யாவின் கூட்டாளிகள் குறித்து 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ராசைய்யாவின் கூட்டாளிகளான அப்புனு (எ) சந்திரசேகர், பிரபு, பிரேம்நாத் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் 4 பேரும் கோகுல்நாத்தை வெட்டி கொன்றதை ஒப்புக்கொண்டனர். பின்னர் இவர்களை நேற்று முன்தினம் நள்ளிரவு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி, 3 பேரை புழல் சிறையிலும் சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் போலீசார் சேர்த்தனர். மேலும், ராசையா உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.