சேலம் அருகே இருக்கும் ஜாகிர்ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜீவா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மூத்தமகன் முருகேசனிடமும், இளைய மகன் ஜீவாவுடனும் வாழ்ந்து வருகின்றனர். 15 வயதான முருகேசனின் மூத்த மகன் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கட்டிட தொழிலாளியாக தந்தையுடன் வேலை பார்த்து வருகிறார்.

முருகேசனுக்கும் அவரது அண்ணன் சரவணனிற்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மதுபோதையில் சரவணன் தனது தம்பியை ஆபாசமாக திட்டியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மதுபோதையில் சரவணன், முருகேசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு முருகேசனின் மூத்த மகன் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அவரிடமும் ஆபாசமாக பேசி சரவணன் தகராறு செய்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சரமாரியாக சரவணனை தாக்கி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த சரவணன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பிணமாக கிடந்த சரவணனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த சூரமங்கலம் காவலர்கள் விசாரணையை தொடங்கினர். அப்போது சரவணன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அந்த வீட்டில் மாடிப்படிகளே இல்லை. இதையடுத்து தீவிர விசாரணை செய்த போலீசார், முருகேசனின் மூத்த மகன் அடித்து சரவணன் இறந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து சிறுவன் கைது செய்ய பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.