சென்னையில் சொத்து பிரச்சனை காரணமாக மாமன் மகளை பிளேடால் 13 இடங்களில் கொடூரமாக அறுத்தே கொன்ற அத்தை மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை அருகே ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சோ்ந்தவா் வேதவல்லி (50). இவர் தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணி செய்து வருகிறார். இவரது தம்பி பூபதி. இவா் சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் வேதவல்லி தனது தம்பி மகள்களான மோனிஷா, ஷோபனா (13) ஆகியோரை தன் வீட்டில் வளர்த்து வந்தார். இதில் மோனிஷா, திருமணமாகி அருகே சின்னமலையில் உள்ள தனது கணவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். 

இதேபோல வேதவல்லியின் மகன் பாபு, அயனாவரத்தில் தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே ஷோபனாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல வேதவல்லி வேலைக்கு சென்றுவிட்டார். ஷோபனா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதற்கிடையே, மோனிஷா, தனது சகோதரி ஷோபனாவை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, உடல்முழுதும் கத்தியால் குத்தப்பட்டு பலத்த ரத்த காயங்களுடன் ஷோபனா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கும், வேதவல்லிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 13 இடங்களில் பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்த ஷோபனாவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் நடத்தியதில் வேதவல்லியின் மகன் பாபு, வேதவல்லி வசித்து வரும் வீடு தனக்கு வேண்டும் என தகராறு செய்து வந்துள்ளார். அதேவேளையில் வேதவல்லி ஷோபனா மீது அதிகளவு பாசத்துடன் இருந்ததால், வீடு தனக்கு கிடைக்காமல் சென்றுவிடுமோ என்ற எண்ணத்தில் பாபு இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை சம்பவத்துக்கு முன்னர் பாபு, வேதவல்லி வீட்டுக்கு வந்து சென்றது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் பாபு, ஷோபனாவை கொலை செய்துவிட்டு, தப்பியோடியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.  அதேவேளையில் ஷோபனா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.