தஞ்சை மாவட்டம், மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
இந்நிலையில் இந்த சிறுமி திருமணம் ஆகாமலேயே கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரசவ வலி அதிகரிக்கவே அவரது பெற்றோர் சிறுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை அனைத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்து வரும் பக்கத்து வீட்டைச்சேர்ந்த சேர்ந்த 12 வயது சிறுவன் தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும், இதில் தான் கர்ப்பமானதாகவும் சிறுமி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியின் பெற்றோரிடமும் இதுபற்றி விசாரித்தனர். தனது மகள் கர்ப்பமானது சமீபத்தில் தான் தெரிந்தது. இதுபற்றி தங்களிடம் தெரிவிக்காமல் அவர் மறைத்து விட்டதாகவும் கூறினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக உள்ளதாக கூறியபோது நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.

இந்நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தோம். இங்கு மகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி அரசு மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் கொடுத்தனர் என்று கூறினர். இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி வளாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 12 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
