நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கராத்தே பயிற்சியாளராக இருந்து வருபவர் சாபு ஆப்ரஹாம். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், கராத்தே பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், மாணவிக்கு, பயிற்சியாளர் பாலியல் தொந்தரவு தொடர்ந்து அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அந்த மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், பள்ளி நிர்வாகம் மற்றும் தேவலாய கமிட்டியிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால், இரு இடங்களிலும் உரிய பதில் கிடைக்காதநிலையில், மகளின் எதிர்காலம் பாதிக்கும் என, மாணவியின் தந்தை வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என தடுத்துள்ளார். இதனால் மாணவியின் தாயார் மற்றும் தந்தைக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவியின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் இருவர் சேர்ந்து, மாணவி மற்றும் மாணவியின் தாயாரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், கூடலூர் போலீசார் மாணவியின் தந்தை, சித்தப்பாக்கள் இருவர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக வந்த 4 பேர் என மொத்தம் 7 பேரை, கடந்த திங்கள்கிழமை அன்று மாலை கைது செய்தனர். மேலும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துவந்த கராத்தே பயிற்சியாளர் சாபு ஆப்ரஹாம் மீது வழக்குப்பதிவுசெய்து, போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.