கோவை அருகே இருக்கும் கோவைபுதூர் செல்வம் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி லட்சுமி. பாலசுப்பிரமணியன் ஆடிட்டராக இருந்து வருகிறார். இவரது அலுவலகம் அவரின் வீடு இருக்கும் அதே பகுதியில் உள்ள விசாலாட்சி நகரில் இருக்கின்றது. தினமும் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு பாலசுப்ரமணியன் இருசக்கர வாகனத்தில் சென்று வருவார்.

இன்று காலை வழக்கம் போல தனது அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி லட்சுமியும் வீட்டை பூட்டி விட்டு காய்கறி வாங்குவதற்காக கடைக்கு சென்று இருக்கிறார். மதியம் சுமார் 1 மணி அளவில் லட்சுமி வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் நகை திருட்டு போயிருந்தது.

இதனால் பதறிப்போன அவர் உடனே தனது கணவர் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அவர் நகை திருடுபோனது குறித்து குனியமுத்தூர் காவல்துறையில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்ற மோப்ப நாய் பின்னர் நின்றது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை திருடு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.