Tamilnadu : புத்தாண்டு முதல் ஊரடங்கா..? தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா..? 31 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகிறது !
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு மற்றும் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தியது ஆகியவற்றின் அடிப்படையில், தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சிறப்பு நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. அதன்படி, மருத்துவர்கள் வனிதா, புர்பசா, சந்தோஷ் குமார் மற்றும் தினேஷ் பாபு ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர், நேற்று மாலை சென்னை வந்தடைந்தனர். இன்று தொடங்கி 5 நாட்களுக்கு இக்குழுவினர் தமிழகத்தில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
முதல் நாளான இன்று காலை 11.30 மணியளவில் சென்னை டி.எம்.எஸ் அலுவலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்துடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆய்வு செய்ய உள்ள மத்திய குழுவினர் தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர். இறுதியாக 5 நாட்கள் நிறைவடைந்த பிறகு, வல்லுநர்கள் குழு மத்திய சுகாதாரத்துறையிடம் அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழ்நாடு முழுவதும் இதுவரை 97 பேருக்கும் ஒமிக்ரான் அறிகுறி உள்ளது. தமிழ்நாட்டிலும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகள் மத்திய அரசிடம் இருந்து வருவது தாமதமாகிறது.
முதல் மற்றும் 2வது கொரோனா அலையின்போது இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் புதிய தரவு அலகு தொடக்கம்; புதிய தரவு மையத்தின் மூலம் தமிழ்நாட்டு சித்த மருத்துவர்கள், இந்திய மருத்துவ துறையுடன் தொடர்பு கொள்ள முடியும். தமிழ்நாட்டில் அமையவுள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் இந்த பணிகள் முடிக்கப்படும். சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான அலுவலகத்தை 10 நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்; இந்தியாவுக்கு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் இருக்கும். ஊரடங்கு தொடர்பாக வரும் 31ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளோம். இந்த ஆலோசனைக்கு பிறகு இரவு நேர ஊரடங்கு போடலாமா என்பது குறித்து முடிவு எடுப்போம்’ என்று கூறினார்.