முக்கிய தலைவர்களை தாக்கும் கொரோனா..குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு தொற்று உறுதி..
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னை ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தி கொள்ளுவதாக அறிவித்துள்ளார்.
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னை ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தி கொள்ளுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா முன்றாம் அலை வேகமெடுத்துள்ளது. நாட்டில் தினசரி கொரோனா தொற்று 3 லட்சமாக பதிவாகி வருகிறது. அந்த வகையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி 3,33,533 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 46,393 பேரும் கேரளாவில் 45,136 பேரும் கர்நாடகாவில் 42,470 பேரும் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். தொற்று அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4ஆவது இடத்தில் உள்ளது.
நாடெங்கும் 2,59,168 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 21,87,205ஐ தொட்டுள்ளது. இதுவரை 161கோடியே 47 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.இதனிடையே கொரோனா தொற்றிற்கு உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக மத்திய பாதுக்காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோருக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது குடியரசு துணைதலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னை ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தி கொள்ளுவதாக அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள அவர், தன்னுடன் தொடர்பில் உள்ளோரும் தனிமைப்படுத்தி கொள்ளுவதுடன், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுப்போல் நாடாளுமன்ற கட்டடத்தில் பணியாற்றுவோரில் 875 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவை செயலகத்தில் மட்டும் 271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் அமைப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அபாயம் தொடர்ந்து நீடித்து வருவதாக எச்சரித்துள்ள இன்சகாக் அமைப்பு, ஜனவரி 3 க்கு பிறகு இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு சமூகப் பரவலில் இருப்பதாகவும், டெல்லி மற்றும் மும்பையில் நகரங்களில் அதுவேகமாக பரவி ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.