India corona:ஆறுதல் செய்தி.. திடீரென்று குறைந்த கொரோனா..3 லட்சம் பதிவான நிலையில் 40 ஆயிரத்துக்கு கீழ் குறைவு..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 3.19 % ஆகவும் வாராந்திர விகிதம் 3.99% ஆகவும் குறைந்துள்ளது.
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கொரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தை எட்டியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்தன.
நாட்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி., 15 -18 வயதுடையோருக்கான கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்பட்டது. இதனிடயே கொரோனா தொற்று பிப்ரவரி தொடங்கியதிலிருந்து மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் இனி வீடுகளில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. வருகை தந்த நாளில் இருந்து 14 நாட்களுக்கு தங்கள் உடல் நிலையை கண்காணித்துக் கொள்ள வேண்டும். இந்த வழிகாட்டுதல் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேர கொரோனாநிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,113 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 3.19% என்றளவில் உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 3.99%. நோயில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.37% ஆக உள்ளது. இதுவரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,65,534 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 91,930 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,16,77,641 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிற்கு 346 பேர் உயிரிழந்தனர். இதன் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,09,011 ஆக பதிவாகியுள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 173 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி திட்டம் அமலில் உள்ள நிலையில், இந்த வயதுடையோரில் 70% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.