Corona :ஜெட் வேகத்தில் கொரோனா.. ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா.. அச்சத்தில் மக்கள்..
இந்தியாவில் ஒரே நாளில் 3.17 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று 2.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 3 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 491 பேர் சிகிச்சை பலனின்றி 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,''இந்தியாவில் 249 நாட்களில் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 லட்சத்து 17 ஆயிரத்து 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 82 லட்சத்து 18 ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த பாதிப்பு 9,287 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 19 லட்சத்து 24 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை கடந்த 234 நாட்களில் இது மிக அதிகபட்சமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 491 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 87 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 159.67 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.ஒட்டுமொத்த பாதிப்பில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5.03 சதவீதமாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 93.69 சதவீதமாகவும் குறைந்துள்ளது'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாள் பாதிப்பு 23,888 ஆக இருந்த நிலையில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 3,093 அதிகரித்து 26,981 ஆக பதிவாகியுள்ளது. 1,50,635 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 26,981 ஆக உள்ளது. இதில் தமிழகத்தில் 26,949 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 32 பேர் என 26,981 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.