Corona TN: மக்களே அலர்ட்.. கொரோனா 4 வது அலை ஏற்பட வாய்ப்பு.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை..
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாவிட்டால் அதுவே கொரோனா 4 வது அலை பரவுவதற்கு காரணமாக அமைந்துவிடும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தென்கொரியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை மக்கள் கவனமுடன் பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நான்காவது அலை ஏற்படும் வாய்ப்புள்ளதா எனும் கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வேகம் கணிசமாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 60 க்கு கீழ் குறைந்துள்ளது. நான்காவது நாளாக கொரோனா பாதிப்பில் உயிரிழப்பு பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகவே ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வாரம் தமிழ்நாட்டில் 25ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழ்நாட்டில் 25ஆவது மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 5.53 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 5.32 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல 4 கோடிக்கும் அதிகமானோருக்கு 2 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதாவது 92% பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியும் 80% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது என்று கூறினார்.
மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து மாநிலத்தில் 12- 14 வயதுடையவர்களுக்கு இதுவரை 4.29 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனிடையே இதுவரை 1.34 கோடி பேர் 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். எனவே அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் காட்ட கூடாது என்று அறிவுறுத்தினார். மேலும் கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக விலகிவிடவில்லை என்றும் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை ஒழுங்காக பின்பற்றவில்லை என்றால் மீண்டும் 4ஆம் அலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே 2 வது தவணை தடுப்பூசி போடாமல் இருப்போரின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல், இனி வருங்காலங்களில் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், பொதுமக்கள் முக கவசம் அணிவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதுவும் 4ஆம் அலை பரவு வாய்ப்பாக அமைந்துவிடும் என்று எச்சரித்தார்.