Asianet News TamilAsianet News Tamil

அலர்ட்..!ஆர்டி-பிசிஆர் க்கு மட்டும் தான் அனுமதி.. சுய பரிசோதனை கிட்க்கு நோ..எச்சரித்த சுகாதாரத்துறை

தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன எனவும் 'ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்' மூலம் மக்கள் சுய பரிசோதனை மேற்கொண்டு தங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

Tamil Nadu allowed to RT-PCR corona test only
Author
Tamilnádu, First Published Jan 16, 2022, 9:02 PM IST

கொரோனா தொற்று பாதிப்பு இரண்டாம் அலையைவிட மூன்றாம் அலையில் வேகமாக பன்மடங்கு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி ஒரு நாள் பாதிப்பு 6,983-ஆக இருந்த தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து, இன்று ஒரே நாளில் 23,975 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 23,989 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 14 குறைந்து 23,975 ஆக பதிவாகியுள்ளது. 1,40,720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 23,975 ஆக உள்ளது

இதனிடையே தொற்று பாதிப்பை கண்டறிய கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழக அரசால் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை பொருட்டு, தனியார் மருந்தகங்களில் சுய கொரோனா பரிசோதனை கிட் அதாவது ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதை வாங்கி பயன்படுத்த எந்தவித கட்டுபாடுகளும் இல்லாததால், மெடிக்கல் ஷாப்களில் ஒரு கிட்-ஐ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுவதாக சொல்லபடுகிறது.

இதுதவிர,பிரபல ஆன்லைன் வர்த்தக, பார்மசி தளங்களிலும் 15 நிமிடங்களில் முடிவு தெரிந்துகொள்ளலாம் என்றும், நேரடியாக சென்று வாங்குவதை விட சற்று விலை குறைத்தும் விளம்பரப்படுத்தி விற்பனை செய்யபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை விட இதற்காகும் செலவு குறைவு என்பதாலும், வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ள முடியும் என்பதாலும் பலர் இதை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

ஆனால், பெரும்பாலானோருக்கு அந்த கிட்-ஐ எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும் என்றே தெரியதாததால், தவறான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் 'ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்' முடிவு துல்லியமாக இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சுய பரிசோதனை முடிவு தவறாக இருந்து, அவர் தனக்கு கொரோனா தொற்று இல்லை என்று கருதி வெளியில் சுற்றினால், பலருக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சுய பரிசோதனை கிட் விற்பனையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா சிகிச்சைக்காக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 'ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்' முடிவை எங்கும் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, வீட்டிலேயே பொதுமக்கள் சுயமாக பரிசோதனை செய்துகொண்டு, தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தொற்று அறிகுறிகள் இருந்தால், முறையாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்-ஐ அனுமதித்த மாநிலங்களில், தொற்று அறிகுறிகள் இருந்து, சுய பரிசோதனை முடிவில் 'நெகட்டிவ்' என்று வந்தால், மீண்டும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்தே தொற்றை உறுதிப்படுத்துகின்றனர். எனவே, மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் தமிழகத்தில் சுய பரிசோதனை கிட் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios