உள்ளே வந்த கொரோனா…. லீவு விட்ட பள்ளி நிர்வாகம்…
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் 8 பேருக்கு கொரோனா பரவியதால் பள்ளிக்கு 2 நாள் லீவு விடப்பட்டுள்ளது.
உதகை: நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் 8 பேருக்கு கொரோனா பரவியதால் பள்ளிக்கு 2 நாள் லீவு விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா எனும் பெருந்தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டதால் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கடந்த 1ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட இந்த 20 நாட்களில் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 80 மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர்.
கொரோனா பரவல் காரணமாக அந்தந்த பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது. இந் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் 8 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானதால் பள்ளிக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
இதேபோன்று திருப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து அந்த பள்ளிக்கும் லீவு விடப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்ட உள்ளது.
வந்தவாசி அடுத்த தெள்ளாறில் அரசு பள்ளி மாணவி, குணக்கம்பூண்டியில் 2 பிளஸ் 2 மாணவிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். ஆகையால் அந்த பள்ளிகளும் தற்காலிகமாக விடுமுறையை அறிவித்துள்ளன.