Corona Puducherry : அதிகரிக்கும் உயிரிழப்பு.. ஒரே நாளில் 5 பேர் பலி.. இன்று மட்டும் 1,897 பேர் பாதிப்பு..
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,897 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 10 நாட்களில் கொரோனாவிற்கு இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2446 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று 1,897 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நேற்றை விட 549 குறைவு. ஆனால் கொரோனா உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக இருந்தநிலையில் நேற்று நிலவரப்படி 3 பேர், இன்று 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"புதுச்சேரி மாநிலத்தில் 4,801 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 1,395 பேர், காரைக்காலில் 342 பேர், ஏனாம் 116 பேர், மாஹேவில் 44 பேர் என மொத்தம் 1,897 (39.51 சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 52 ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகளிலும் 174 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 15,522 பேரும் என மொத்தமாக 15,696 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்த 55 வயது பெண், ஈஸ்வரன் கோயில் வீதியைச் சேர்ந்த 89 வயது முதியவர், வில்லியனூர் புதுநகரைச் சேர்ந்த 80 வயது முதியவர், வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர், புதுச்சேரி மோந்த்ரேஸ் வீதியைச் சேர்ந்த 90 வயது முதியவர் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,906ஆக அதிகரித்துள்ள. இறப்பு விகிதம் 1.28 சதவீதமாக உள்ளது.
புதிதாக கொரோனா தொற்றிலிருந்து 1,264 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 611 (88.44 சதவீதம்) ஆக உள்ளது. புதுச்சேரியில் இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 15 லட்சத்து 21 ஆயிரத்து 213 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதனிடையே புதுச்சேரியில் கடந்த 10 நாட்களில் மட்டும் 18 ஆயிரத்து 347 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.