இவையெல்லாம் ஒமைக்ரான் அறிகுறி.. இந்த அறிகுறி இருந்தால் ஆக்ஸிஜன் குறையும்..எச்சரிக்கும் ஆய்வறிக்கை
ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு தோல், நகம், உதடு போன்றவற்றில் நிறம் வெளுத்துபோகும் அறிகுறி தோன்றலாம் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு இயக்குனரகமான சிடிசி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒமைக்ரான் என்பது அசாதாரணமான பிறழ்வுக் கூட்டங்களைக் கொண்ட பெரிதும் மாற்றமடைந்த வைரஸாகும். மேலும் இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பரவிய மற்ற மாறுபாடுகளிலிருந்து மிகவும் வேறுபட்டது என்று கூறப்படுகிறது. இப்போது பலருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், புதிய வகைகளின் அறிகுறிகள் நுட்பமாக வளர்ந்துள்ளன. எனவே நீங்கள் முழுமையாக 2 தடுப்பூசிகள் போட்டிருந்தாலும் கவனமுடன் இருப்பது அவசியம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒமைக்ரான் பரவல் உலகம் முழுக்க மிக தீவிரமாக பரவி வருகிறது. இதில் 32 உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் அறிகுறிகள் பல மாற்றம் அடைந்துள்ளது. டெல்டாவை விட வேகமாக பரவினாலும் டெல்டா அளவிற்கு இது ஆபத்து கொண்டதாக இதுவரை இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. தலைவலி, இருமல், மூக்கில் சளித்தொல்லை, வறண்ட தொண்டை, உடல் அதிக சோர்வாக காணப்படுதல் , லேசான காய்ச்சல், சதைகள் வலி, மூட்டுகள் வலி ஆகிய எட்டு அறிகுறிகள் ஒமைக்ரான் நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது.
பொதுவாக இருக்கும் இந்த அறிகுறிகள் தவிர பல புதிய அறிகுறிகள் கடந்த சில நாட்களாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் ஏற்படும் நபர்களுக்கு வாந்தி மற்றும் பசியின்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. The ZOE என்று கொரோனா சோதனை அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த இரண்டு புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்காவில் நோய் கட்டுப்பாட்டு இயக்குனரகமான சிடிசி முக்கிய அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒமைக்ரான் ஏற்படும் நபர்களுக்கு தோல், உதடு, நகத்தில் சில அறிகுறிகள் தோன்றலாம். தோல் வெளுத்து போகும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு தோல் நீல நிறத்திற்கு மாறும் வாய்ப்புகளும் உள்ளது. அதேபோல் உதடு, நகம் ஆகிவையும் வெளுத்து போகவோ, நீல நிறத்திற்கு மாறவோ வாய்ப்பு உள்ளது.
உங்கள் நிறத்தை பொறுத்து இந்த மாற்றம் அமையும். வெள்ளை தோல் கொண்டவர்களுக்கு நீல நிறத்தில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கருப்பு தோல் கொண்டவர்களுக்கு வெளுத்து போக வாய்ப்புகள் உள்ளது. குறைந்த அளவிலான ஆக்சிஜன் ரத்தத்தில் இருப்பதால் இந்த மாற்றம் உடலில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்ட பின் இந்த அறிகுறிகள் வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.உடலில் ஆக்சிஜன் குறைந்துவிட்டது என்பது காட்டும் அறிகுறி இதுவென்றும், இந்த அறிகுறி வந்தால் மட்டும் உடனே மருத்துவரை அணுக வேண்டுமென்றும் ஆய்வறிக்கையில் கூறபட்டுள்ளது. உடலில் ஆக்சிஜன் குறையும் போது சமயங்களில் அது மூச்சு சுவாசத்தில் தெரியாது. இது போன்ற அறிகுறி மூலம் தெரியும். அந்த மாதிரியான சமயத்தில் அலட்சியமாக இருந்துவிட கூடாது.
ஒமைக்ரான் பாதித்த பலருக்கு சுவாச பிரச்சனை வருவது இல்லை. இது இருதயத்தை பெரிய அளவில் பாதிக்கவில்லை. வெகு சிலருக்கு மட்டுமே லேசான மூச்சு பிரச்சனைஏற்படுகிறது. சிலருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்படுகிறது. மனக்குழப்பம், உறக்கத்தில் சிக்கல் போன்ற அறிகுறிகளும் ஒமைக்ரான் நோயாளிகளிடம் ஏற்படுகிறது என்று அமெரிக்காவில் நோய் கட்டுப்பாட்டு இயக்குனரகமான சிடிசி தெரிவித்துள்ளது.