ராஜஸ்தான் மாநிலத்தில் 75 வயது முதியவர் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்ட நிலையில் திடீரென்று உயிரிழந்துள்ளார்.  

ராஜஸ்தானில் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பிய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்டு, 2 முறை கொரோனா நெகட்டிவ் வந்து நலமடைந்திருந்தார் என்று கூறப்படுகிறது. கடந்த 15 ஆம் தேதி 75 வயதான முதியவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒமைக்ரானிலிருந்து குணமடைந்தவரின் திடீர் மரணம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் 2 வது கொரோனா அலையை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போல் ஒமைக்ரான் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரசின் இடத்தை ஒமைக்ரான் வகை தொற்று நிரப்புவதாக மத்திய அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலம் சிஞ்ச்வார்ட் பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் ஒமைக்ரான் பாதிப்பால் உயிரிழந்ததாக அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது. நைஜீரியாவில் இருந்துவந்த அவர், ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த 28-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அந்த நபர் கடந்த 13 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மரணம் ஒமைக்ரான் பாதிப்பால் ஏற்பட்டது என்று மகாராஷ்டிரா மாநில அரசு பதிவு செய்துள்ளது. 

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது.ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 450 பேருக்கும், அடுத்தபடியாக டெல்லியில் 320 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 46 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் இதுவரை ஒமைக்ரான் தொற்றிலிருந்து 374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 3,48,38,804 ஆக உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோன தொற்றில் இருந்து 7,585 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,83,080 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 220 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 144.54 கோடியாக உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவிய ஒமிக்ரான் வைரஸ் இன்று 120க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 3.30 லட்சம் பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். 59 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த 2ம் தேதி கர்நாடகாவில் முதல் முதலாக இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 14ம் தேதி வரை ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. உலகளவில் ஒமிக்ரான் பாதிப்பால் 59 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், இந்தியாவிலும் இரண்டு பேர் ஒமிக்ரானால் உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது