Asianet News TamilAsianet News Tamil

4 நாட்களில் 4 மடங்கு அதிகரித்த கொரோனா..நுரையீரலை குறைவாக தாக்கும் ஒமைக்ரான்..ஆய்வில் புது தகவல்..

புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் அதிக அளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் நோய் பாதிப்பினால் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

Omicron Corona Alert
Author
India, First Published Jan 2, 2022, 3:44 PM IST

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக அளவில் மட்டுமின்றி இந்தியாவில் வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதனால் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,775 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய நாள் ஒப்பிடுகையில் 35 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் தினசரி பாதிப்பு கடந்த 4 நாட்களில் சுமார் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டெல்டா உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்றுகளை ஒப்பிடும்போது ஒமைக்ரானின் பாதிப்பு தன்மை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில்  தெரிய வந்துள்ளது.  அமெரிக்கா மற்றும் ஜப்பானைச்சேர்ந்த விஞ்ஞானிகள் எலிகள் மீது ஒமைக்ரான் பாதிப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.அதில் ஒமைக்ரான் தொற்று மூலம் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, மற்றும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. கொரொனாவின் பிற உருமாறிய வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் பாதிப்பு பத்தில் ஒரு மடங்கு குறைவாக இருந்தது என ஆய்வில் கூறப்பட்டிருந்தது.

ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் மனித திசுக்கள் மீதான ஆய்வறிக்கையும் ஒமைக்ரான் பாதிப்பு குறைவாக இருப்பதையே சுட்டிக்க்காட்டுகிறது.12 நுரையீரல் மாதிரிகளில் மேற்கொண்ட ஆய்வு கொரோனாவின் முந்தைய உருமாற்றங்களைக் காட்டிலும் ஒமைக்ரானின் பரவல் நூரையீரலில் மெதுவாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஒமைக்ரான் நுரையீரலின் கீழ்ப்பகுதியில் அதிகமாக பாதிக்காததால் அதிக உயிரிழப்புகளை ஏற்படாது என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். எலிகளின் மீதான ஆய்வில் ஒமைக்ரானின் பாதிப்பு அறிகுறிகள் குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் ஒமைக்ரான் தொற்றால் நுரையீரல் பாதிப்பு ஏற்படாது என்ற தகவல் உலக மக்களை சற்று ஆறுதலில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே நாடு முழுவதும் புதிதாக 161 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது.ச்மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,கொரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளை பரிசோதித்து அவர்களை விரைவாக தனிமைப்படுத்துவது முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. இதில் 64 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் எந்த விதத்திலும் தொடர்பில் இல்லாதவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 619 ஆக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை 1489 ஆக அதிகரித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios