Asianet News TamilAsianet News Tamil

Omicron in India: டெல்டா போல் பரவுகிறதா ஒமைக்ரான்..? அலர்ட் நிலையில் அரசு.. அச்சத்தில் மக்கள்..

இந்தியாவில் 2 வது கொரோனா அலையை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போல் ஒமைக்ரான் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரசின் இடத்தை ஒமைக்ரான் வகை தொற்று நிரப்புவதாக மத்திய அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Omicron Corona Alert
Author
India, First Published Dec 31, 2021, 4:40 PM IST

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது.ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 450 பேருக்கும், அடுத்தபடியாக டெல்லியில் 320 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 46 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் இதுவரை ஒமைக்ரான் தொற்றிலிருந்து 374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சிஞ்ச்வார்ட் பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் ஒமைக்ரான் பாதிப்பால் உயிரிழந்ததாக அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது. நைஜீரியாவில் இருந்துவந்த அவர், ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த 28-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அந்த நபர் கடந்த 13 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மரணம் ஒமைக்ரான் பாதிப்பால் ஏற்பட்டது என்று மகாராஷ்டிரா மாநில அரசு பதிவு செய்துள்ளது. 

இந்நிலையில் ராஜஸ்தானில் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பிய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்டு, 2 முறை கொரோனா நெகட்டிவ் வந்து நலமடைந்திருந்தார் என்று கூறப்படுகிறது. கடந்த 15 ஆம் தேதி 75 வயதான முதியவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒமைக்ரானிலிருந்து குணமடைந்தவரின் திடீர் மரணம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் 2 வது கொரோனா அலையை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போல் ஒமைக்ரான் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரசின் இடத்தை ஒமைக்ரான் வகை தொற்று நிரப்புவதாக மத்திய அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதாகவே மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு என்பது சுனாமியை விட பேரலையாக மாறப்போவதாக உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது. இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நுழைந்துள்ள ஒமைக்ரான் வகை கொரோனா தனது பிடியை இருக்கு வருகிறது. ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்தோடு இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 3,48,38,804 ஆக உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோன தொற்றில் இருந்து 7,585 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,83,080 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 220 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 144.54 கோடியாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios