Omicron ba2 :உலகளவில் பரவலாம்! பிஏ.2 ஒமைக்ரான் வைரஸ் பற்றி எச்சரித்த உலக சுகாதார அமைப்பு
ஒமைக்ரானிலிருந்து உருமாற்றம் அடையும் பிஏ.2 வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், ஏற்கெனவே உண்மையான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தீவிரமாகப் பாதிக்கப்படுவார்களா என்பது தெளிவாக இல்லை என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது
ஒமைக்ரானிலிருந்து உருமாற்றம் அடையும் பிஏ.2 வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், ஏற்கெனவே உண்மையான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தீவிரமாகப் பாதிக்கப்படுவார்களா என்பது தெளிவாக இல்லை என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது
உலகளவில் கொரோனா தொற்றால் 40 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 57.80 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளில் 3வது அலையும், சிலநாடுகளில் 4-வது அலையும் வீசி வருகிறது. ஆனாலும், தற்போது உலக நாடுகளில்பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ்தான் கொரோனாவின் கடைசி திரிபு என்று இதுவரை உலக சுகாதார அமைப்பு கூறவில்லை, ஆனாலும், பல மருத்துவ வல்லுநர்கள் இதுபோன்று கூறி வருகிறார்கள்.
தடுப்பூசி, முகக்கவசம், சமூகவிலகல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவைதான் கொரோனா பரவலில் இருந்து தடுக்கும் வழி என்று மருத்துவ வல்லுநர்களும், உலக சுகாதார அமைப்பும், அறிவியல் அறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் பிரிவின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வேன் கேர்கோவ் சிஎன்பிசி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
உலகளவில் பரவி வரும் ஒமைக்ரான் பிஏ.1 வைரஸைவிட, அதிலிருந்து உருமாற்றம் அடைந்து வெளிவரக்கூடிய பிஏ.2 வேரியன்ட் வைரஸ் உலகளவில் பரவுவதற்கான சாத்தியங்கள் உள்ளன, தீவிரமான பாதிப்பையும் ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. பிஏ.1 வைரஸ் பரவும் வேகத்தைவிட, பிஏ.2 வைரஸ் வேகமாகப் பரவக்கூடும். ஆதலால் வரும் காலத்தில் உலகளவில் பிஏ.2 வைரஸால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரிக்கலாம்.
உலக சுகாதார அமைப்பு பிஏ.2 உருமாற்ற வைரஸை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த துணை உருமாற்ற வைரஸ், பல்வேறு நாடுகளில் புதிய தொற்றை உருவாக்கி அதிகப்படுத்தினால், ஒமைக்ரான் வைரஸ் பரவல் படிப்படியாகக் குறைந்துவிடும்.
இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. துணை உருமாற்ற வைரஸால் ஏற்படும் நோய் தொற்று தீவிரத்தில்க பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை.
ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவியபோதிலும், லேசான பாதிப்பைதான் மனிதர்களுக்கு ஏற்படுத்தியது. ஆல்ஃபா, டெல்டா அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
பிஏ.2 வைரஸ் பிஏ.1 வைரஸைவிட 1.5 மடங்கு வேகமாகப்பரவக்கூடியது என்று டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனாவில் பாதிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களிடம் எளிதாகத் தொற்றும். ஆனால், தடுப்பூசிசெலுத்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியவர்களிடையே பரவுதல் குறைவு.
தீவிரத் தொற்றைக் குறைத்தலிலும், உயிரிழப்பைத் தடுத்தலிலும் தடுப்பூசிகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால், அனைத்து தொற்றுகளையும் தடுப்பூசியால் தடுக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆதலால், தடுப்பூசி செலுத்தியவர்கள்கூட, உள்ளரங்குகளில் செல்லும்போது, முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்.
இவ்வாறு மரியா வேன் கேர்கோவ் தெரிவித்தார்
உலக சுகாதார அமைப்பின் கொரோனா தடுப்பு மேலாளர், மருத்துவர் அப்தி முகமது கூறுகையில் “ ஒமைக்ரான் பிஏ.1 வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களை, பிஏ.2. வைரஸ் பாதிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பிஏ.2. வைரஸ் எந்த அளவுக்கு வேகமாகப் பரவும் என்பது குறித்த அடுத்துவரும் விவரங்கள் முக்கியமானது. கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் மூன்றில் இருபங்கு மக்கள் ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டனர்” எனத் தெரிவித்தார்