NeoCov Virus:3 பேரில் ஒருவர் உயிரிழக்கலாம்.. ஒரு உருமாற்றம் அடைந்தாலே போதும்..பகீர் கிளப்பும் தகவல்..
வௌவால்களிடம் இருந்து பரவிவரும் NeoCoV எனும் புதிய வைரஸின் நெருங்கிய தொடர்பு கொண்ட பிடிஎப்-2180- கோவ் வைரஸ் மனிதர்களிடம் பரவும் தன்மை பெற்றுள்ளதாகவும் மனிதர்களிடம் பரவுவவதற்கு, நியோகோவ் வைரஸில் ஒரு உருமாற்றம் நிகழ்ந்தாலே போதும் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதியவகை கொரோனவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட 3 வாரங்களிலே 100க்கும் மேற்பட்ட உலகநாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மைகொண்டது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒமைக்ரான் வைரஸினால் உயிர்ச்சேதங்கள் அதிக அளவில் இல்லை என்று ஆய்வுகள் தெரிவித்தன.
மேலும் இரண்டு டோஸ், பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஒமைக்ரான் நோய் தொற்றிலிருந்து எளிதில் குணமாகி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.மருத்துவமனை சிகிச்சையில் சேருவோரின் எண்ணிகையும் கணிசமாக குறைந்தது. பெரும்பாலும் நோய் தொற்று ஆளானவர்கள் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் பல்வேறு நாடுகள் பொது முடக்கம், ஊரடங்கு உள்ளிட்டவற்றில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தன.
இந்த சூழலில், ஒமைக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்திருக்கும் பிஏ-2 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பி.ஏ- 2 வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளில் ஒமைக்ரான் வைரசின் புதிய மாறுபாடு வகையான பி.ஏ.2 வைரஸ் பரவி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒமைக்ரான் வகை கொரோனா வைரசின் துணை திரிபுகள் பி.ஏ.1, பி.ஏ.2, பி.ஏ.3 என உலக சுகாதார அமைப்பு வரிசைப்படுத்தியுள்ளது. இந்த மாறுப்பட்ட ஒமைக்ரான் குறித்து ஆய்வுகள் நடைபெறும் நிலையில் இது நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் என்றும் இதன் மூலம் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிய வைரஸான நியோகோவ் (NeoCoV)வேகமாக பரவி வருகிறுது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ் குறித்து கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூஹான் மாகாண விஞ்ஞானிகள் கூறும் தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் கடந்த 2012 - 2015 காலக்கட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மெர்ஸ்-கோவ் (MERS-CoV) வைரஸ் மற்றும் மனிதர்களிடம் கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்த சார்ஸ் - கோவ் (SARS- CoV) வைரஸ்களின் கலவையாக இருப்பதாக கூறுகின்றனர். வௌவால்களிடம் இருந்து பரவிவரும் NeoCoV எனும் புதிய வைரஸின் , நெருங்கிய தொடர்பு கொண்ட பிடிஎப்-2180- கோவ் வைரஸ் மனிதர்களிடம் பரவும் தன்மை பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.
வூஹான் பல்கலைக்கழகம் மற்றும் சீன உயிர் இயற்பியல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கருத்தின்படி, இந்த வைரஸ்கள் மனிதர்களிடம் பரவுவவதற்கு, நியோகோவ் வைரஸில் ஒரு உருமாற்றம் நிகழ்ந்தாலே போதும் என்கின்றனர். இந்த வைரஸ்கள், மனித உடலில் உள்ள செல்களுடன் பிணைப்பை ஏற்படுத்துவதால், அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர். மேலும் மெர்ஸ்-கோவ் (MERS-CoV) மற்றும் நியோகோவ் வைரஸ் பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் உயிரிழக்க வைக்கும் எனவும், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.