India Corona:ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்த கொரோனா..இன்று ஒரே நாளில் 67,084 பேர் பாதிப்பு..
இந்தியாவில் மூன்றாவது நாளாக தினசரி தொற்று பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மூன்றாவது நாளாக தினசரி தொற்று பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்தது. நாடு முழுவதும் 3-வது அலை ஏற்பட்டு பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற கொரோனா கட்டுபாடுகள் அமலுக்கு வந்தன.
பின்னர் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இந்நிலையில் நாட்டில் 3-வது நாளாக ஒரு லட்சத்திற்கும் கீழ் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. மேலும் கொரோனா பரவல் குறித்த கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக 67,084 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1,241 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவின் மொத்த பலி எண்ணிக்கை 5,06520 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 1,67,882 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து 4,11,80,751 பேர் மொத்தம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு , தற்போது சிகிச்சையில் இருப்போரின் விகிதம் 1.86% ஆக உள்ளது. இன்றைய நிலவரப்படி 7,90,789 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 1,71,28 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் விகிதம் 4.44 சதவீதமாக குறைந்துள்ளது.
தமிழகத்திலும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4,519இல் இருந்து 3,971ஆக குறைந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது. அதே போல் கொரோனாவால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 12 பேரும், அரசு மருத்துவமனைகளில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,837ஆக அதிகரித்துள்ளது.