India corona: இன்று ஒரே நாளில் 959 பேர் பலி.. அதிகரிக்கும் உயிரிழப்பு..? 2.09 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
நாட்டில் புதிதாக 2,09,918 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 10% குறைவாகப் பதிவாகியுள்ளது. நேற்று புதிதாக 2.35 லட்சம் பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2.09 லட்சமாக குறைந்துள்ளது.
நாட்டில் புதிதாக 2,09,918 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 10% குறைவாகப் பதிவாகியுள்ளது. நேற்று புதிதாக 2.35 லட்சம் பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2.09 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 959 எனப் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை பரவலாக பீதியைக் கிளப்பியுள்ளது.ஆனால், கேரள மாநிலம் கோவிட் மரணங்கள் பற்றிய கணக்கெடுப்பை முடித்து பழைய கணக்கின்படி உள்ள 374 மரணங்களையும் நேற்றைய கோவிட் மரணக் கணக்குடன் சேர்த்துள்ளதே இந்த எண்ணிக்கை உயரக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று ஒரே நாளில் 2,09,918 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,13,02,440 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,62,628 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,89,76,122 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 18,31,268 (4.43%) ஆக உள்ளது. தினசரி பாசிடிவிட்டி விகிதம் 15.77% என்றளவில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 959 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,95,050 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை 166 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(1,66,03,96,227) (166 கோடி).இன்று முதல் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கான இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடையோருக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவாக்சின்' தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும் எனவும் குறைந்த அளவிலான கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் மாநிலங்கள் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.