Covid :மிரட்டும் கொரோனா..பாதிப்பு திடீர் அதிகரிப்பு..கொரோனா பரிசோதனையை குறைக்காதீங்க.. மத்திய அரசு கடிதம்..
கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ஒமைக்ரான் வைரஸ், கவலை கொள்ளத்தக்க வகையறாவைச் சேர்ந்ததாக உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இதனால், பரிசோதனைகள் தான் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அடித்தளம். தரவுகள் சரியாக இல்லாவிட்டால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஐசிஎம்ஆர் இணையதளத்தில் நிறைய மாநிலங்களில் கொரோனா பரிசோதனைகள் குறைந்துள்ளது தெரியவருகிறது. எனவே, ஒமைக்ரான் தடுப்பை துல்லியமாக அணுக வேண்டுமென்றால் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள கொரோனா பரிசோதனைகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். ஹாட்ஸ்பாட்டுகளை அறிந்து, நுண்ணளவு கட்டுப்பாட்டுப் பகுதிகளை உருவாக்கினால், தொற்றுப் பரவலைத் தடுக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா பரவலை தடுக்கவும் உயிரிழப்புகளை குறைக்கவும் பரிசோதனை செய்வது என்பது மிகவும் அவசியமானது.கொரோனா அறிகுறிகள் இருக்கக் கூடிய நபர்களுக்கு மற்றும் கொரோனா உறுதியான நபர்களுடன் தொடர்பில் இருந்த தொற்று பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ள நபர்களுக்கும் கட்டாயம் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த இரு நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,82,970 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி நிலவரப்படி , தினசரி பாதிப்பு 2.71 லட்சமாகவும், 16-ம் தேதி 2.58 லட்சமாகவும், நேற்று முன்தினம் 2.38 லட்சமாகவும் குறைந்திருந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது. 3-வது அலையில், இதுவரை இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு உச்சத்துக்கு சென்றுள்ளது.
மகாராஷ்டிராவில் 39,207 பேரும், கேரளாவில் 28,481 பேரும், தமிழகத்தில் 23,888 பேரும், குஜராத்தில் 17,119 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 14,701 பேரும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37,91,241 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிகையும் 8,961 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 441 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 4,87,202 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று மட்டும் 76,35,229 டோஸ் தடுப்பூசிகளும், மொத்தம் 158 கோடியே 88 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது .தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முந்தைய தினம் தமிழ்நாட்டில் 23,443 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், இன்று அது சற்று அதிகரித்துள்ளது.