அதிவேகத்தில் பரவும் கொரோனா.. நாளை முதல் சிறார்களுக்கு தடுப்பூசி..மாநில அமைச்சர்களுடன் அதிரடி ஆலோசனை..

மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை கையாளும் விதத்தில் சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Health minister Mansukh mandaviya meeting

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.ஒமைக்ரான் அச்சுறுத்தல் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நாட்டில் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் அது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனை, பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய நான்கு செயல்முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Health minister Mansukh mandaviya meeting

மேலும் நாம் இதற்கு முன் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போர் புரிந்துள்ளோம். கடந்த காலங்களில் கற்ற பாடங்களை பயன்படுத்தி ஒமைக்ரானுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது என்று கூறிய அவர், அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை கையாளும் விதத்தில் சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். மாநிலங்கள் கொரோனா கால நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும் எனவும் தங்களுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை தெரியபடுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூட்டத்தில் பேசினார். மேலும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கொரோனாவை முறையாக கையாள பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், கொரோனா சங்கிலையை உடைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும்  இந்த ஆலோசனை  கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 

Health minister Mansukh mandaviya meeting

இதில் தமிழ்நாட்டின் சார்பில், மாநில மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில், மருத்துவப் படுக்கைகள், சுகாதாரத்துறைப் பணியாளர்கள், தடுப்பூசி செலுத்துவது, நோய் கட்டுப்பாடு பகுதிகளை அதிகரிப்பது போன்ற அம்சங்கள் பற்றி கலந்தாலோசனை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios