கொரோனாவுக்கு சாவே கிடையாதா.? பிரிட்டனில் உருமாறிய கொரோனா எக்ஸ்இ வைரஸ் கண்டுபிடிப்பு.. பீதி கிளப்பும் WHO!
ஒமைக்ரானை போலவே மிக வேகமாகப் பரவும் தன்மைகொண்டது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமைக்ரான் வைரசின் திரிபுகளில் இருந்து இந்த வைரஸ்உருமாற்றம் அடைந்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் புதிய வகை உருமாறிய கொரோனாவான எக்ஸ்இ கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா அலைகள்
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பிறகு கொரோனா வைரஸ் உலகில எல்லா நாடுகளுக்கும் பரவியது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உலக மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3 அலைகள் உருவாகி மக்களை கதி கலங்க வைத்துவிட்டது. தொற்றுப் பரவலை சமாளிக்க பொதுமுடக்கம், ஊரடங்கு அமல், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, பொருளாதாரம் பாதிப்பு, அதன் ஏற்படும் விளைவுகள் என கொரோனா தொற்று மக்களை விடாமல் சுற்றி சுற்றி அடித்து வருகிறது.
குறையும் கொரோனா வைரஸ்
கடந்த ஆண்டு தொடக்கத்தில் உலகின் பல நாடுகளிலும் கொரோனா தடுப்பூசிகள் வரத் தொடங்கிய பிறகு, படிப்படியாக தடுப்பூசிகள் உலகம் முழுவதும் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவும் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இரண்டாம் அலையான கொரோனா டெல்டா பிளஸ் உலக மக்களை பாடாய்படுத்திய நிலையில், மூன்றாம் அலையான ஒமிக்ரானால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இதனால், உலகில் பல நாடுகளில் கொரோனா எண்ணிக்கைப் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால், விரைவில் கொரோனாவுக்கு முந்தைய காலத்துக்கு மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் செல்வார்கள் என்று கருதப்பட்டு வருகிறது.
புதிதாக எக்ஸ்இ வைரஸ் கண்டுபிடிப்பு
இந்நிலையில், இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டிருப்பதாக பகீர் கிளப்பியிருக்கிறது உலக சுகாதார அமைப்பு. புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் எக்ஸ்இ (XE) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதுவும் ஒமைக்ரானை போலவே மிக வேகமாகப் பரவும் தன்மைகொண்டது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமைக்ரான் வைரசின் திரிபுகளில் இருந்து இந்த வைரஸ்உருமாற்றம் அடைந்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸின் துணை மாறுபாடு வகையான BA.2 - பரவும் வேகத்தை விட 10 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் பாதிப்பு
ஆனால், இதை உறுதிப்படுத்துவதற்கு கூடுதல் தரவுகள் தேவைப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கடந்த ஜனவரி 19 ஆம் தேதியே கண்டறியப்பட்டதாக பிரிட்டன் சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. பிரிட்டனில் இதுவரை 637 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை வேறு எந்த நாட்டிலும் இந்த கொரோனா கண்டறியப்படவில்லை. புதிய உருமாறிய கொரோனா வைரஸால் மீண்டும் புதிய அலை பாதிப்பு ஏற்படுமோ என்ற பீதி மீண்டும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.