Coronavirus : மீண்டும் லாக்டவுனா ? இந்தியாவில் கொரோனா 3வது அலை சாத்தியமா ?
இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலால் கொரோனா 3வது அலை ஏற்படுமா ? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
நவம்பர் 2021 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானாவில் ஒமைக்ரானின் முதல் வழக்கு பதிவாகியது. இந்தியாவில் முதன்முதலில் டிசம்பர் 2020 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை பொறுத்த வரை அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பரவி அதிகரிக்க துவங்கிய பின் தான், இந்தியாவில் அதன் தாக்கம் வீரியமாக இருந்தது. அதேபோல் தான், தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்ரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இரண்டாம் அலை பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதால், தினசரி நோய் தொற்றின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியிருக்கிறது. இது ஆறுதலான செய்தி என்றாலும், கொரோனா 3வது அலை உருவாகுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் ஆனது, உலக நாடுகளையும் அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.எனவே இந்தியாவில் 3வது அலை வருமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், ‘தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 161 பேருக்கு 'ஒமிக்ரான்' வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 88% பேருக்கு முதல் தவணையும், 58% பேருக்கு 2வது தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் 3வது அலையை சமாளிக்க இந்தியா முழு அளவில் தயாராக உள்ளது. குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் அனுபவத்தைக் கொண்டு ஒமிக்ரான் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கும்’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.